top of page
Search

குணநலஞ் சான்றோர் ... 982, 981, 04/05/2024

04/05/2024 (1155)

அன்பிற்கினியவர்களுக்கு:

சான்றாண்மை என்ற சொல் தமிழில் ஒரு தனித்துவமான சொல் என்று பார்த்துள்ளோம். சான்றாண்மை என்றால் நற்குணங்களை ஆளும் தன்மை. காண்க 12/04/2021.

 

இருக்கட்டும். இன்னும் சுருக்கமாகச் சொல்லமுடியுமா? இதோ:

 

“நம் கடன் நல்ல பணிகளைச் செய்து கிடப்பதே!” இஃதே சான்றாண்மை.

 

அஃதாவது, நல்லச் செயல்களையெல்லாம் நாளும் செய்வது நமது கடமை என்று அவற்றைச் செய்வது சான்றாண்மை என்கிறார் நம் பேராசான்.

 

சரி, அப்படி இருந்தால்?

 

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – 981; - சான்றாண்மை

 

கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு = கடமை இதுவென அறிந்து சான்றாண்மையை மேற்கொள்பவர்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப = நல்ல பண்புகள் எல்லாம் இயல்பாக அமைந்துவிடும் என்பர் சான்றோர்.

 

கடமை இதுவென அறிந்து சான்றாண்மையை மேற்கொள்பவர்க்கு நல்ல பண்புகள் எல்லாம் இயல்பாக அமைந்துவிடும் என்பர் சான்றோர்.

 

முதலில் நல்லவனாக நடி; பின் அதுவே பழகி நல்லவனாக மாறுவாய்; பழக்கம் வழக்கமாக மாறும்; பின், வேறென்ன, சான்றாண்மையில் (MBA – Specialisation in Managing Good Virtues)பட்டம் பெற்றுவிடலாம்!

 

பாவனையில் இருக்கு எல்லாம். காண்க 03/11/202.

 

மனமிருந்தால் பறவைக்

கூட்டில் மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே

மலையைக் காணலாம்

துணிந்து விட்டால் தலையில்

எந்த சுமையும் தாங்கலாம்

 

குணம் குணம் அது கோவிலாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் … கவியரசர் கண்ணதாசன்; சுமைதாங்கி, 1962

 

எந்த நலம் இருப்பினும் குண நலம் இருந்தால் மனிதனும் தெய்வமாகலாம்.

 

Being rich in knowledge and worldly goods may give you power, but only your character will earn you respect.

 

அறிவு மற்றும் உலகப் பொருள்களால் நிறைந்திருப்பது உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கலாம், ஆனால், உங்கள் குணம் மட்டுமே உங்களுக்கு மரியாதை பெற்றுத் தரும்.

 

குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉ மன்று. – 982; - சான்றாண்மை

 

பிற நலம் எந் நலத்து உள்ளதூஉம் அன்று = பிற சிறப்புகள் என்று கருதப்படும் எந்தச் சிறப்பிலும் இல்லாத உயர்வினை; குண நலம் = நல்ல குணங்கள் நிறைந்திருப்பதனால் பெறலாம்; சான்றோர் நலனே = அதுவே, சான்றோன் என்ற உயர்வையும் தரும்.

 

பிற சிறப்புகள் என்று கருதப்படும் எந்தச் சிறப்பிலும் இல்லாத உயர்வினை, நல்ல குணங்கள் நிறைந்திருப்பதனால் பெறலாம்; அதுவே, சான்றோன் என்ற உயர்வையும் தரும்.


நலம் என்ற சொல்லுக்கு அழகு, இன்பம், உபகாரம், உயர்வு, கண்ணோட்டம், நன்மை, பயன், விருப்பம், புகழ், செம்மை நிறம் என்றெல்லாம் பொருள் சொல்கிறது தமிழ் அகராதி.

 

குணம், குணம் அது கோவிலாகலாம் …

 

சரி, நல்ல குணங்களைப் பட்டியலிட முடியுமா?

கேட்போம் நம் பேராசானை!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Comments


Post: Blog2_Post
bottom of page