02/12/2022 (638)
தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாட்டுகள் மூலம் குணம் உள்ளவரைத் தெளிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
நல்ல குணங்கள் மட்டும் உடையவர்கள், தீய குணம் மட்டும் உடையவர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை.
வில்லிபாரதத்தில் திரௌபதி மாலையிட்ட சருக்கம் எனும் ஒரு பகுதி. திரௌபதிக்கு மாலையிட மணமகனைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை (சுயம்வரம்) ஏற்பாடு செய்கிறார்கள். அந்தப் போட்டியில் பலரும் கலந்து கொள்கிறார்கள். அதில் கர்ணனும் கலந்து கொள்கிறான்.
பங்கேற்க வந்திருப்பவர்களின் பெருமைகளை தோழிமார்கள் திரௌபதிக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அப்படிச் சொல்லிக் கொண்டுவரும்போது கர்ணனைக் குறித்து:
... ஒருவனிடம் பல தீய குணங்கள் இருக்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு நல்ல குணம் அவனிடம் இருக்கும். ஆனால், நல்ல குணங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றவன் யாரென்றால் அது இந்தக் கர்ணன் தான்!
“பெண்மைக்கு இரதி என வந்த பெண்ணார் அமுதே பேருலகில்
உண்மைக்கு இவனேவலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே
திண்மைக்கு இவனேநெறிக்கு இவனே தேசுக்கு இவனேசிலைக்கு இவனே
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்றிவனே.” --- பாடல் 39; திரௌபதி மாலையிட்ட சருக்கம்; வில்லிபாரதம்
உண்மை = சத்தியம்; உறவு = நட்பு; வலி= பலம்; உரை = புகழ்; திண்மை = கலங்காத நெஞ்சுறுதி; நெறி =நல்லொழுக்கம்; தேசு = அழகு; சிலை = வில் ஆற்றல்; வன்மை = கொடை ...
கர்ணன் என்ற பெயரை கன்னன் என்றே குறிப்பார் வில்லிபுத்தூர் பெருமான். மாற்றி மாலையிட்டு இருந்தால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும்!
இது நிற்க. ஒருவனிடம் பல தீய குணங்கள் இருக்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு நல்ல குணம் அவனிடம் இருக்கும். அந்த நல்ல குணம் தலைமை மேற்கொள்கின்ற செயலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்!
அவனும் தேவைப்படலாம் ஒரு தலைமைக்கு!
நம் பேராசான் சொன்னதை நூறாவது நாள் சிறப்புக் குறளாக நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 27/04/2021 (100).
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்ககொளல்.” --- குறள் 504; அதிகாரம் - தெரிந்து தெளிதல்
குணம்நாடி = நல்லவைகளை நாடி; குற்றமும் நாடி = அல்லவைகளையும் கண்டு தவிர்த்து; அவற்றுள் மிகைநாடி = அதில் நல்லவை மிகுந்து இருப்பின் அதை ஏற்று; மிக்க கொளல் = அதையே (பயன் கருதி) கொள்ள வேண்டும்.
‘நாடி’ என்ற சொல்லுக்கு நேர்முகமாகவும் எதிர்மறையாகவும் பொருள் படும் படி அமைந்த குறள் இது.
நல்லவைகளை நாடி; அல்லவைகளையும் கண்டு தவிர்த்து; அதில் நல்லவை மிகுந்து இருப்பின் அதை ஏற்று; அதையே (பயன் கருதி) கொள்ள வேண்டும்.
தெரிந்து தெளிவோம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments