12/08/2021 (170)
நிறை மொழி மாந்தர் வார்த்தைகள் அப்படியே நடக்கும் என்று பார்த்தோம். அது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அப்படியே நடக்குமாம்.
நீத்தார்கள், முதலில் துறவு எனும் குன்றிலே ஏறி , அடுத்த குன்றாகிய மெய்யுணர்வை அடைகிறார்கள். மெய் உணர்வால் பற்றுகளை முழுதாக அறுத்து, அதற்கும் மேலான குன்றான அவாவின்மையை அடைகிறார்கள்.
அவ்வாறு மேலான குன்றினை அடைந்தாலும், உயிர் குணங்கள் என்று பார்த்தோம் அல்லவா, அதாவது, காமம், கோபம், மயக்கம் போன்றவை அவர்களுக்குள்ளே எங்கோ ஒளிந்திருக்குமாம். அது எப்போதாவது தலை தூக்க வாய்ப்பு இருக்குமாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், அது வந்த அடுத்த நொடியிலேயெ அவர்களுக்கு மெய் உணர்வு இருப்பதாலே அடக்கிவிடுவார்களாம். ‘அந்த ஒரு விநாடி’ இருக்கே அது ரொம்பவே பயங்கரமாக இருக்குமாம். அதை நம்மாலே தாங்க முடியாதாம்.
நாம ஏற்கனவே இரண்டு குறள்களைப் பார்த்திருக்கோம். மீள்பார்வைக்காக:
“ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.” --- குறள் 891; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை
“ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.” --- குறள் 985; அதிகாரம் - சான்றான்மை
மேலே சொன்ன குறள்களை கவனம் செய்வோம். இன்றைய குறளுக்கு வருவோம்.
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.” --- குறள் 29; அதிகாரம் – நீத்தார் பெருமை
குணங்கள் ஆகிய குன்றுகளின் மீது ஏறி நின்றவர்களாகிய முற்றும் துறந்தவர்களின் கோபத்தை ஒரு நொடியே ஆகினும் நம்மாலே தாங்க முடியாது.
குணம் என்று தானே குறளிலே இருக்கு, குணங்கள் என்று எப்படி பொருள் வருகிறதுன்னு கேட்கலாம். அதற்கு ‘சாதி ஒருமை’ என்ற இலக்கணம் இருக்காம். குணம் என்று ஒருமையில் சொன்னாலும் குணங்கள் என்று பன்மையிலேதான் பொருள் எடுக்கனுமாம். உதாரணம்: மாம்பழம் இனிக்கும்; பாகல் கசக்கும். மாம்பழங்கள், பாகல்கள் என்று சொல்லத்தேவையில்லை. இதுதான் ‘சாதி ஒருமை’. இது நிற்க.
‘அகலாது அணுகாது தீக்காய்வார்’ போலதான் அவர்களிடம் பழகனும். ரொம்பவே கவனமாக இருங்க!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments