05/12/2022 (641)
கடவுளும் கணக்குப் பார்த்துதான் வேலை செய்வார். அவருக்கு எது சாதகமோ அதைத்தான் செய்வார். கடவுள் தானேன்னு அவருக்கு வேலையைக் கொடுக்கக் கூடாது. எதற்கு சொல்கிறேன் என்றால், இவன் எனக்கு சொந்தம், அவன் எனக்கு பழக்கம் என்றெல்லாம் பார்த்து வேலை கொடுக்க மாட்டாங்க அறிவுடையவர்கள். ஒருத்தன் நமக்கு பின்னாடி மறைந்து வேலை செய்கிறானா, அப்போதே கண்டுபிடி, இவன் நமக்கு ஆக மாட்டான்!
இதெல்லாம் என் கருத்துன்னு நீங்க நிச்சயமாக நினைக்க மாட்டீங்க. மிகவும் சரி. முன்றுறையரையனார் எனும் ஒரு புலவர் பெருமான், அந்தக் காலத்திலே இருந்திருக்கார். அவர் “பழமொழி” ன்னு ஒரு நூலை செய்துள்ளார். அவர் சொன்ன கருத்துதான் அது.
இந்த பழமொழி எனும் நூல், நம்ம பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று! இதை பழமொழி நானூறு என்றும் குறிக்கிறார்கள்.
சரி அந்தப் பாடலைப் பார்ப்போம்:
“சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில்.” --- பாடல் 177; பழமொழி
“கொற்றப்புள் ஊர்ந்து உலகம் தாவின அண்ணல்” யார் தெரியுங்களா?
கருட வாகனத்தில் வலம் வரும் நம்ம பெருமாள்தான்!
‘கொற்றப்புள்’ என்றால் கருடனாம்!
அவர்கூட தனக்கு சீர்ந்தது, அதாவது, அவருக்கு சாதகமானது என்றால் அதைத்தான் செய்வாராம்!
அற்றத்தால் = மறைத்து மறைத்து செய்யும் செயல்களை கவனித்ததால்; தேறார் அறிவுடையார் = வேலைக்கு சேர்க்க மாட்டாங்க அறிவுடையவர்கள்.
ஆதலினால், மக்களே ஏமாறாதீர்கள்!
குறள் 506ல், பற்றில்லாத சாமியார்களை நம்ப வேண்டாம் என்றார் நம் பேராசான். நம்ம முன்றுறையரையனார் பெருமான் அதற்கும் மேலே ஒருபடி போய், சாமியைக் கூட நம்பி வேலைக்கு வைக்க முடியாது என்கிறார்.
சரி, நம்ம பேராசான் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஆசிரியர்: காதன்மை கந்தா ...
நம்மாளு: என்ன, கந்த பெருமானையும் வேலைக்கு வைக்கக் கூடாதா? நம்ம பேராசான்கள் எல்லாம் ஒரு முடிவோடத்தான் இருப்பாங்க போல.
ஆசிரியர்: கொஞ்சம் பொறுங்க தம்பி. கந்து என்றால் ‘பற்று’ என்று பொருள்.
நம்மாளு: சரியாகத்தான் சொல்லியிருக்காங்க. கந்து என்றால் “பற்று”. “பற்று” என்றால் “கடன்” கடனுக்கு வட்டி, அதான் ‘கந்து வட்டி’. ஐயா, எப்படி என் புலமை!
ஆசிரியர்: தம்பி, போதும். இந்தக் குறளை முடித்துவிட்டு நான் கிளம்பனும். அதுவரை கொஞ்சம் ...
நம்: (கப்சிப்...)
அன்பினால் பற்று கொண்டு, அறிவில் குறைந்தவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொண்டால் அதுவே நமக்கு எல்லா அறியாமையையும் தரும்.
“காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.” --- குறள் 507; அதிகாரம் = தெரிந்து தெளிதல்
காதன்மை = காதலினால், அன்பின் நெருக்கத்தால்; கந்தா = கந்து ஆக = அதையே பற்றுக் கோடாக, முதன்மையாகக் கொண்டு; அறிவு அறியார் தேறுதல் = அறிவில்லாதவர்களை வேலைக்கு வைத்தல்;
பேதைமை எல்லாம் தரும் = எல்லா மடத்தனங்களுக்கும் காரணாமாகிவிடும்.
அன்பினால் மட்டுமே ஒருத்தனை வேலைக்கு வைக்கக் கூடாது. ‘ஐயோ பாவம்’ மட்டும் பார்த்தும் வேலைக்கு ஒருத்தனை வைக்கக் கூடாது.
நம்மாளு: அப்படி வேலைக்கு வைத்தால், “ராஜ ராஜ சோழன் MA, MLA” என்ற திரைப்படத்தில் அமாவாசையால் மணிக்கு நேர்ந்த கதிதான்!
(நம்மாளு சொல்லி முடிப்பதற்குள் ஆசிரியர் தெருமுனையைத் தாண்டிவிட்டார்.)
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Commentaires