09/07/2023 (857)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
குறள் 756 இல் உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார் தெறுபொருள் முதலானைவை அரசினுடைய பொருள் என்பதை எடுத்துச் சொன்னார்.
அடுத்துவரும் குறளில் பொருளின் பெரும் பயன் சொல்கிறார். அதாவது வாழ்க்கை அன்பில் தொடங்கி அருளில் முடிய வேண்டும். அன்பின் வழியாக அருள் வரும். அதனால் அருளினை அன்பின் குழந்தை என்கிறார். அந்தக் குழந்தைக்கு நாம் தான் உயிரியல் தாய் (Biological mother) என்றாலும் அந்தக் குழந்தை நம்முடன் வளர செவிலித்தாய் வேண்டும். அது யார் என்று கேட்டால் அவள்தான் பொருளென்னும் செவிலித்தாய் என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. காண்க 29/01/2023 (12). மீள்பார்வைக்காக:
“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு” – குறள் 757; அதிகாரம் – பொருள் செயல்வகை
அன்பு ஈன் அருள் என்னும் குழவி = அன்பினால் பெற்றெடுக்கப்படும் அருள் என்னும் குழந்தை; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு = பொருள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் செல்வம் என்ற செவிலித்தாயால் வளரும்.
அன்பினால் பெற்றெடுக்கப்படும் அருள் என்னும் குழந்தை, பொருள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் செல்வம் என்ற செவிலித்தாயால் வளரும், வாழும்.
எனவே, பொருளானது அன்பையும் ஈனும், அருளையும் மலர வைக்கும். இதுதான் பயன். ஆகவே, செய்க பொருளை என்கிறார்.
நல்வழியில் வந்த பொருள் நம்மை அற வழியில் அதாவது தர்மத்தின் வழியில் இட்டுச் செல்லும். தர்மம் தலை காக்கும்! தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
“தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்... ... மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்; நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்; செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ... “ கவியரசர் கண்ணதாசன், திரைப்படம்: தர்மம் தலை காக்கும் (1963)
பணமானது சோதனைகளில் நாம் சிக்கிக் கொள்ளாமல் நம்மை பாதுகாப்பான பார்வையாளனாக மாற்றிவிடும். ஒரு உதாரனம் சொல்கிறார் நம் பேராசான்.
ஒரு கற்பனை: ஒரு ஊரில் யானைகளின் போர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதைக் கண்டு களிக்க காசிற்கு ஏற்றார் போல் இடம் ஒதுக்கிறார்கள். காசு அதிகம் கொடுத்தால் மலையின் மேலே இருந்து பாதுகாப்பாகப் பார்க்கலாம். தொலை நோக்கு கருவிகளும் உண்டு! இப்படி படிப்படியாக அரங்கை அமைக்கிறார்கள். காசு இல்லாதவர்கள் யானைகள் சண்டை போடும் வட்டத்திற்கு மிக அருகில் இருக்கும் காலி இடத்தில் நின்று கொள்கிறார்கள். சமத்துவம் கருதி எல்லாருக்கும் வாய்ப்பாம்!
யானைகளிடையே பயங்கர சண்டை! அந்தச் சண்டை செய்யும் வட்டத்தை உடைத்துக் கொண்டு கட்டிப் புரள்கின்றன. அன்றைய தினம் பார்வையாளர்கள் ஆறு பேர் பலி! இதுதான் அடுத்த நாள் செய்தித் தாள்களில் தலைப்பு!
நாம் சல்லிக்கட்டில் பார்க்கிறோம் இல்லையா? பார்வையாளர்கள் பலி. ஆனால் பணமுள்ளவர்கள் பாதுகாப்பாக உயரமான மேடைகளில் இருக்கிறார்கள்!
இது நிற்க.
இதனை நம் கண் முன்னே நிறுத்துகிறார் நம் பேராசான். பணமானது சோதனைகளிலும் பாதுகாப்பான பார்வையாளனாக இருக்க வைக்கும். இதுதான் பொருளின் பயன் என்கிறார். யானை, போர் என்பதெல்லாம் குறியீடுகள்.
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.” --- குறள் 758; அதிகாரம் – பொருள் செயல்வகை
தன் கைத்து ஒன்று உண்டாக வினை செய்வான் = தன் கையில் பொருள் சேருமாறு செயலாற்றுபவர்கள்; குன்று ஏறி யானைப் போர் கண்டற்றால் = வசதியாக ஒரு உயரமான குன்றின் மீது நின்று கொண்டு யானைகளின் போரினைப் பார்ப்பவர்களைப் போல இருப்பார்கள்.
தன் கையில் பொருள் சேருமாறு செயலாற்றுபவர்கள், எப்படி இருப்பர்கள் என்றால், வசதியாக ஒரு உயரமான குன்றின் மீது நின்று கொண்டு யானைகளின் போரினைப் பார்ப்பவர்களைப் போல இருப்பார்கள்.
பொருளிருந்தால் வாழ்க்கையில் வரும் சோதனைகளால் பாதிப்புகள் பெருமளவில் இருக்காது என்கிறார்.
ஆகையினால் அன்பொடும் அருளொடும் செய்க பொருளை!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios