24/11/2023 (993)
அன்பிற்கினியவர்களுக்கு:
தீவினை அச்சத்தைத் தொடர்ந்து ஒப்புரவு அறிதல் அதிகாரத்தை அமைத்துள்ளார். தவிர்க்க வேண்டியனவற்றை முன்னர் சொன்னவர் அடுத்து செய்ய வேண்டயனவற்றைச் சொல்கிறார்.
ஒப்புரவு என்றால் சமுதாயத்தோடு ஒற்றுமையாக மட்டுமல்ல ஒத்தாசையாகவும் இருத்தல். பொது நன்மைக்காகச் செய்தல், உழைத்தல். காண்க 27/06/2021.
மழையானது எந்தவித கைம்மாறும் எதிர்பாராமல் இந்த உலகத்திற்கு தன் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று, நம்மில் பலர் தமக்கு எந்தப் பயனும் இல்லாவிட்டாலும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் இவ் உலகத்தார்க்கும் அளப்பரிய நன்மைகளைச் செய்து கொண்டுள்ளார்கள். அந்த மழைக்கும் அவர்களுக்கும் நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்?
கரங்களை மேல் நோக்கியே ஏந்தாதீர்கள். ஏந்தினாலும் மாவீரன் கர்ணனைப் போல் ஏந்துங்கள் என்கிறார்.
மன்னவர் பொருள்களைக் கைகொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார் ,மாமன்னன் கர்ணனோ
தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார்
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைப்பவன் கர்ண தீரன் வறுமைக்கு வறுமையை
வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க - கவியரசு கண்ணதாசன், கர்ணன் (1964).
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்வது ஒப்புரவு.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு. - 211; ஒப்புரவு அறிதல்
கைம்மாறு = எதிர் உதவி; மாரிமாட்டு உலகு என் ஆற்றும் = எல்லாவற்றையும் செழிப்பாக்கும் இம்மழைக்கு இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய இயலும்; கைம்மாறு வேண்டா கடப்பாடு = அதேபோன்று இவ் உலகில் பலர் எந்தவித கைமாற்றினையும் எதிர்பாராமல் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டுள்ளதால் நாமெல்லாம் செழிப்பாக இருக்கிறோம்.
எல்லாவற்றையும் செழிப்பாக்கும் இம்மழைக்கு இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய இயலும். அதேபோன்று, இவ் உலகில் பலர் எந்தவித கைமாற்றினையும் எதிர்பாராமல் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டுள்ளதால் நாமெல்லாம் செழிப்பாக இருக்கிறோம்.
இந்தக் கருத்து ஏதோ நாம் வியப்பதற்குச் சொன்னாற்போல் தோன்றினாலும், நம் பேராசான் சொல்லாமல் சொல்வது, ஏன் நீங்களும் உங்களால் ஆகக்கூடியதைச் செய்யக்கூடாது என்பதுதான்.
அக்கருத்தை அடுத்தக் குறளில் தெரிவிக்கிறார். அஃதாவது, நாம் ஈட்டும் பொருள் எல்லாம் யாருக்கு என்று நினைத்தீர்கள்? அவை வேண்டியவர்களுக்கும் கொடுப்பதற்குத்தான் என்கிறார்.
நாம் ஈட்டும் பொருள் நமக்கே நமக்கு என்று செலவு செய்யலாம். அல்லது, யாருக்கும் உதவாமலும் இழக்கலாம். இதிலெல்லாம் பெருமை, சிறப்பு இருக்க முடியுமா என்ன? வந்த பொருளால் சிலருக்காவது ஒரு வளமான வாழ்க்கையையோ அல்லது அவர்களின் ஒரு சிறிய துன்பத்தையாவது போக்கினால் நாம் ஆடி ஓடி உழைத்து ஈட்டிய பொருளுக்குச் சிறப்பு இருக்கும்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. - 212; ஒப்புரவு அறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் = ஒருவன் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம்; தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு = தகுதி உள்ளவர்களுக்கு ஒப்புரவு செய்தற் பொருட்டு.
ஒருவன் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம் தகுதி உள்ளவர்களுக்கு ஒப்புரவு செய்தற் பொருட்டு.
நம்மாளு: ஐயா, எனக்குச் சில சந்தேகங்கள். தாளாற்றி வந்த பொருள் என்று சொல்லாமல் தாளாற்றித் தந்த பொருள் என்று சொல்கிறார்?
ஆசிரியர்: ம்ம்.. நல்ல கேள்விதான். தாளாற்றி என்றால் ஓடி ஆடி உழைத்து என்று பொருள்படும். அவ்வாறு, உழைக்கும்போது நமக்கு யாராவதுதானே பொருளைத் தருவார்கள். ஆகையினால், தந்த பொருள் என்று நம் பேராசான் நினைத்திருக்கலாம். அதுமட்டுமல்ல, நம் உழைப்பின் மூலம் பிறர் பெரும் பயனால் அவர்கள் நமக்கு மனம் உவந்து பொருளைத் தர வேண்டும். அந்தப் பொருளுக்குதான் மதிப்பு. அடித்துப் பிடுங்குவது போலப் பொருள்வரின் அதனை என்ன நாம் பிறர்க்கு உதவுவது? என்றும் இருக்கலாம். எனவே அந்தத் தொடர் இரு குறிப்புகளைத் தருகிறது. ஒன்று பொருள் மனம் உவந்து ஒருவர் தருவதால் வர வேண்டும். அதனை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நம்மாளு: அருமை ஐயா. நன்றி. இன்னுமொரு ஐயம். அது ஏன் பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்றார்? ஈட்டிய பொருளெல்லாம் நாம் பிறர்க்கு கொடுத்துவிட வேண்டியதுதானா?
ஆசிரியர்: இதுவும் ஓர் அருமையான கேள்வி. தக்கார்க்கு என்பதை நம் பேராசான் இல்வாழ்க்கை அதிகாரத்தின் முதல் மூன்று குறள்களில் வரையறுத்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லறத்தார்க்கு பதினொரு கடமைகள் என்றவர் அதில் “தான்” என்றும் சொல்லியிருக்கிறார். எனவே தக்காரில் நாமும் அடக்கம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்மாளு: நன்றி ஐயா. மேலும் ஓர் ஐயம்! ஏன் உதவி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் வேளாண்மை என்று பயன் படுத்தியுள்ளார்?
ஆசிரியர்: நல்ல கேள்வி. இது உங்கள் முந்தைய கேள்வியொடு தொடர்புடையது. அஃதாவது, ஈட்டிய பொருளை விதைக்க வேண்டும். அதன் பயன் மேலும் பல்கிப் பெருக! விழலுக்கு இறைத்த நீராக மாறிவிடக் கூடாது. அதை நிர்வகிக்கவும் (management) வேண்டும் என்பதனால் வேளாண்மை என்று நம் பேராசான் பொறுத்தமாகச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று எண்ணுகிறேன். நீங்கள் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை என்றால் கடந்து போயிருப்போம். அதற்காக உங்களுக்கு நன்றி. நாளைத் தொடரலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்
Comentarios