23/02/2024 (1084)
அன்பிற்கினியவர்களுக்கு:
யாமம் என்பது நடுஇரவுப் பொழுது என்பது நமக்குத் தெரியும். நாளின் சிறு பொழுதுகளின் பிரிவுகளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 08/10/2022.
இந்த யாமத்தில், இவள் கிடைப்பதற்கு முன், அவன் புலம்பித் தீர்த்தான். மடல் ஏற நினைத்தான். இதைக் காட்சிப் படுத்தினார் நம் பேராசான். காண்க 08/10/2022. மீள்பார்வைக்காக:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண். - 1136; - நாணுத் துறவு உரைத்தல்
என் கண்கள் உறக்கம் இல்லாது தவிக்கும் மடமைக்கு ஊரின் நடுவில் மடல் ஏறுதல் எப்படி என்று திட்டமிடுவதுதான் சரி.
நடுநிசியில் அவன் பட்ட துன்பம் அது. தற்போது மணம் முடித்தாகிவிட்டது. இப்போது நடுநிசியில் துன்பம் இவளுக்கு!
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். – 1167; - படர் மெலிந்து இரங்கல்
காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன் = வெள்ளமெனப் பாய்ந்தோடும் இந்தக் காமக் கடும் புனலில் நீந்திக் கரை காண வழியில்லாமல் இருக்கிறேன்; யாமத்தும் யானே உளேன் = இதோ நடு இரவாகிவிட்டது. எனக்கு இன்னும் எந்த ஒரு துணையுமில்லை. உதவியுமில்லை. நான் மட்டும் தன்னந்தனியளாகத் தவிக்கிறேன்.
வெள்ளமெனப் பாய்ந்தோடும் இந்தக் காமக் கடும் புனலில் நீந்திக் கரை காண வழியில்லாமல் இருக்கிறேன். இதோ நடு இரவாகிவிட்டது. எனக்கு இன்னும் எந்த ஒரு துணையுமில்லை. உதவியுமில்லை. நான் மட்டும் தன்னந்தனியளாகத் தவிக்கிறேன்.
பூ உறங்குது, பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கான் உறங்குது, காற்றும் உறங்குது, நான் உறங்கவில்லை … கவியரசு கண்ணதாசன், தாய் சொல்லைத் தட்டாதே, 1961
கவியரசர் நிலவைத் துணையாக்கினார். நம் பேராசான் இரவையே துணையாக்குகிறார்.
மன்னுயிர் எல்லாம் அதன் அதன் துணையின் மடியில் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்துவிட்டன. இந்த இராக் காலம் எல்லார்க்கும் துணையாயிருக்க நான் மட்டும் அந்த இராக் காலத்திற்கே துணையாக இருக்கிறேனா? நான் மடி சாய என்னவர் எங்கே போனார்? நான் மட்டுமா பாவம். எந்தத் துணையும் இல்லாமல் இருக்கும் இந்த இரவும் பாவம்தான்!
என்ன ஒரு புலம்பல் பாருங்க! எல்லார்க்கும் துணையாக இருக்கும் இரவிற்கு நான் துணையா? என் துணை எங்கே?
மன்னுயிர் எல்லாம் துயிற்று அளித்திரா
என்னல்ல தில்லை துணை. – 1168; - படர் மெலிந்து இரங்கல்
அளி = இரக்கம்; மன் உயிர் = இந்த உலகில் நிலை பெற்றுள்ள உயிர்;
மன் உயிர் எல்லாம் துயிற்று அளித்து இரா = இந்த உலகில் நிலை பெற்றுள்ள உயிர் எல்லாம் அதன் அதன் துணையின் மடியில் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்துவிட்டன. இந்த இராக் காலம் எல்லார்க்கும் துணையாயிருக்கிறது; இரா அளித்து = இந்த இரவு இரங்கத்தக்கது; என் அல்லது இல்லை துணை = அதற்கு என்னை விட்டால் யாரும் துணை இல்லை.
இந்த உலகில் நிலை பெற்றுள்ள உயிர் எல்லாம் அதன் அதன் துணையின் மடியில் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்துவிட்டன. இந்த இராக் காலம் எல்லார்க்கும் துணையாயிருக்கிறது. இந்த இரவு இரங்கத்தக்கது. அதற்கு என்னை விட்டால் யாரும் துணை இல்லை.
தொடர்வோம் நாளை. நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments