22/02/2024 (1083)
அன்பிற்கினியவர்களுக்கு:
தோழி: உன்னைப் போலப் புலம்புபவர்கள் ஊரில் இல்லை. அவ்வாறு, இருப்பது அழகும் இல்லை.
அவள்: உனக்கு அனுபவம் போதாது. அது மட்டுமில்லை. என் மேல் உனக்கு இரக்கமும் இல்லை. காமமும் நாணமும் காவடி போல என் உயிரின் மேல் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கின்றன. நானோ, காமக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரை சேர்க்க ஒரு படகைப் போல் நீ இருப்பாய் என நினைந்தேன். என்ன செய்ய? எனக்கு ஒரு வழியில்லையே?
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். – 1164; - படர் மெலிந்து இரங்கல்
மன்னும் – அசைநிலை – பொருள் இல்லை; காமக் கடல் உண்டே = காமக் கடலிலே தத்தளிக்கிறேன்; அது நீந்தும் ஏமப் புணை இல் = ஆனால், அதை நீந்திக் கடக்க ஒரு பாதுகாப்பான படகு எனக்கு இல்லையே. என் செய்வேன்?
காமக் கடலிலே தத்தளிக்கிறேன். ஆனால், அதை நீந்திக் கடக்க ஒரு பாதுகாப்பான படகு எனக்கு இல்லையே. என் செய்வேன்?
அவள்: தூது சென்று என் துயர் துடைப்பாய் என்றிருந்தேன். நீ என்னிடம் நட்புடன் இருக்கும்போதே எனக்கு உதவாமல் துன்பம் தருகின்றாய். பகைவர்களிடம் உன் கல் நெஞ்சம் என்னென்ன பாடுபடுத்துமோ?
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். – 1165; - படர் மெலிந்து இரங்கல்
மன் – ஒழியிசை; நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் = நட்பாக இருக்கும்போதே துன்பத்தைச் செய்பவர்கள்; துப்பின் எவன் ஆவர் கொல் = பகையாகிவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ?
நட்பாக இருக்கும்போதே துன்பத்தைச் செய்பவர்கள். பகையாகிவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ?
தோழி: என்னைத் தீட்டணும் என்றால் நேரடியாகத் திட்டு. இந்த மாதிரி சாக்கிட்டுப் பாட்டுப் பாடாதே. அவர் இங்கே இருக்கும்போது என்னைத் துரத்தியவள்தான் நீ. போனால் போகின்றது, நீ தனிமையில் வாடுகின்றாயே என்று ஆதரவாக வந்தால் என்னைக் கடிவாயோ?
அவள்: அம்மாடி கோபித்துக் கொள்ளாதே. உன்னை நான் சொல்வேனா? நான் அவரைத்தான் சொன்னேன். நீ அந்தப் பாட்டை வேண்டுமானால் ஒரு முறை படித்துப்பார்.
தோழி: சாதூர்யமாகப் பேசுகிறாய். அது வள்ளுவப் பெருந்தகையின் சுட்டித் தனம். நட்பு என்ற சொல்லைப் போட்டு இப்படியும் அப்படியுமாகப் பொருள் எடுக்கும் விதத்தில் உனக்கு உதவியுள்ளார். சரி இருக்கட்டும். நீங்கள் இருவரும் இணைந்து இருக்கும் போது இன்பம் கடல் அளவென்றாய். இப்போது, பிரிந்திருக்கும்போது என்ன சொல்வாய்?
அவள்: என் துன்பம் அந்தக் கடலினும் பெரிதென்பேன்!
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனின் பெரிது. – 1166; - படர் மெலிந்து இரங்கல்
காமம் இன்பம் கடல் = அவர் என்னுடன் இணைந்திருக்கும்போது இன்பம் கடல் அளவாக இருந்தது; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது = ஆனால், அவர் இல்லாத இந்தப் பொழுதோ நான் அனுபவிக்கும் துன்பம் அந்தக் கடலினும் பெரிதாக உள்ளதே!
அவர் என்னுடன் இணைந்திருக்கும்போது இன்பம் கடல் அளவாக இருந்தது. ஆனால், அவர் இல்லாத இந்தப் பொழுதோ நான் அனுபவிக்கும் துன்பம் அந்தக் கடலினும் பெரிதாக உள்ளதே!
மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments