03/10/2022 (581)
காதல் சிறப்புகளை இருவரும் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் அந்தக் காதலுக்கு எதிர்ப்புகள் கிளைந்துவிட்டன. இனி இதை இப்படியே விட்டால் காதலுக்கு மரியாதை இருக்காது என்று எண்ணுகிறான் அவன்.
காளையை மட்டுமல்ல நீ டைனோசரை அடக்கினாலும் உனக்கு என் பெண் கிடையாது என்று தன் காதலியின் தந்தை கூறுவது போல உணர்கிறான்.
கலித்தொகை பாடல் 139ல் துன்பத்திற்கு துணை மடல் என்று கூறுகிறதாம்.
‘மடல்’ என்றால் ஏதோ ஏடெடுத்து எழுதி எண்ணங்களை வெளிப்படுத்தும் கடிதங்கள் இல்லை இந்த மடல்!
இந்த ‘மடல்’ என்பது எல்லோரும் பரிகசிக்குமாறு ஒரு மடச்செயலைச் செய்வது. நாணத்தை துறந்து அதாவது வெட்கத்தைவிட்டு அவள் இல்லையேல் எனக்கு வாழ்வு இல்லை என்று அறிவிப்பது. அதனால் அவன் மேல் ஊர் பெரியவர்களுக்கு ஒரு பரிவு தோன்றி அவனை அவளுடன் சேர்த்து வைப்பது.
இந்தச் செயலுக்கு ‘மடலேறுதல்’ என்று சங்ககால இலக்கியங்கள் சொல்கின்றன. சாம, தான, பேத, தண்ட முறைகளில் இருந்து விலகிய ஒரு வித்தியாசமான நடைமுறை இது.
பன ஓலைகளால் ஒரு குதிரை பொம்மை செய்து அதற்கு கண்ட கண்டப் பூக்களால் அலங்கோலம் (அலங்காரம் இல்லை) செய்து அவனும் எருக்கு போன்ற பூக்களை காதிலும் தலையிலும் சூடிக் கொண்டு உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொண்டு கையிலே அவன் காதலியின் உருவம் வரைந்துள்ள ஒரு காகிதத்தை ஏந்திக் கொண்டு, அந்த பனை குதிரை மேல் ஏறி ஊர்வலம் செல்ல தயாராகிவிட்டான். அவனை இழுத்துச் செல்ல சின்னஞ் சிறார்கள் ஆரவாரத்தோடு கிளம்பிவிட்டார்கள். ஊர்த் தெருக்களில் அவனின் பவனி.
எல்லோருக்கும் நகைப்பு. பெண்ணைச் சார்ந்தவர்களுக்கோ திகைப்பு. பரிவுள்ளவர்களுக்கு பதைப்பு. அவனுக்கோ இதைக் கண்டு அவளின் வீட்டில் பேசி முடிக்க மாட்டார்களா என்ற நினைப்பு.
நம் பேராசான் சொல்வதைக் கேட்போம்.
காமத்தில் உழந்து வருந்துகிறவர்களுக்கு மடலேறுதல்தான் ஒரே பாதுகாப்பு. அதைத் தவிர சிறந்த வழி இல்லை என்கிறார்.
“காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி.” --- குறள் 1131; அதிகாரம் – நாணுத் துறவு
உரைத்தல்
ஏமம் = பாதுகாப்பு; காமம் உழந்து வருந்தினார்க்கு = காதலின் உச்சியில் இருந்து உழல்பவர்களுக்கு; ஏமம் மடல் = மடலேறுதல்தான் பாதுகாப்பு; அல்லது இல்லை வலி = அதுபோன்று வலிமையான செயல் ஒன்றும் இல்லை.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments