08/04/2024 (1129)
அன்பிற்கினியவர்களுக்கு:
காமம் என்னும் கோடாலி நாணம் என்னும் தாழ்ப்பாளைத் தகர்க்க அவளின் மனக் கோட்டைகளின் இரும்புக் கதவுகள் திறந்து கொள்கின்றன. பேதலிக்கிறேன் என்றாள் குறள் 1251 இல்.
பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை… நிலவே…
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை …
மான் உறங்குது மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை …
என் வழி உறங்குது மொழியும் உறங்குது
விழி உறங்கவில்லை….
தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி …
அது தின்றதெல்லாம் போக
இங்கே… இருப்பது மீதி
திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி,
தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி…. கவியரசு கண்ணதாசன், தாய் சொல்லைத் தட்டாதே, 1961
கம்பராமயணத்தில் ஒரு காட்சி. இராமன் சீதையைத் தேடிச் சுற்றித் திரிகிறான். அப்போது அவன் புலம்புவதாக ஒரு பாடல். அதில், மண், மலை, பண் (நீர் நிலை) , பணி, விண், பேய் (கழுது) உள்ளிட்ட அனைத்தும் உறங்கிவிட்டன. நான் இன்னும் உறங்கவில்லை என்கிறான் இராமன்.
மண் துயின்றன; நிலைய மலை
துயின்றன; மறு இல்
பண் துயின்றன; விரவு பணி
துயின்றன; பகரும்
விண் துயின்றன; கழுதும் விழி
துயின்றன; பழுது இல்
கண் துயின்றில, நெடிய கடல்
துயின்றன களிறு. – பாடல் 3748, கிட்கிந்தா காண்டம், கம்பராமயணம்
நடு இரவில் ஒன்றரை மணி நேரம் (ஒரு முகூர்த்த காலம்) நீர் நிலைகளில் உள்ள நீரும் உறங்குமாம்!
நாழிகை, நாடி, விநாடி, நிமிடம், மணி, முகூர்த்தம், யாமம் என்றெல்லாம் நேரத்தை அலகிடுகிறார்கள்.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்; இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம்; மூனே முக்கால் நாழிகை ஒரு முகூர்த்தம்; இரண்டு முகூர்த்தம் ஒரு யாமம் … இப்படிச் செல்கின்றன தமிழ் நேரக் கணக்குகள். இது நிற்க.
பாருங்க எங்கேயோ போயிட்டோம். ஆமாம், யாமத்தில் (நள்ளிரவு) அவள் உறங்கமுடியவில்லை என்று புலம்பப் போய் நான் இந்தச் சுற்று சுற்றிவிட்டேன். இருக்கட்டும், புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தள். அவள் வாழி!
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். – 1252; - நிறை அழிதல்
காமம் என ஒன்றோ கண் இன்று = காமம் என்ற ஒன்று இருக்கிறதே அதற்குச் சிறிதும் இரக்கம் இல்லை; என் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் = இந்த உலகில் உள்ள அனைத்தும் உறங்கும் இந்த நள்ளிரவிலும் என்னையும் என் மனத்தையும் அமைதி இல்லாமல் செய்து உறங்கவிடாமல் செய்வதே அதன் தொழிலாக இருக்கிறது.
காமம் என்ற ஒன்று இருக்கிறதே அதற்குச் சிறிதும் இரக்கம் இல்லை. இந்த உலகில் உள்ள அனைத்தும் உறங்கும் இந்த நள்ளிரவிலும் என்னையும் என் மனத்தையும் அமைதி இல்லாமல் செய்து உறங்கவிடாமல் செய்வதே அதன் தொழிலாக இருக்கிறது.
இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments