08/02/2024 (1069)
அன்பிற்கினியவர்களுக்கு:
பற்றுகளைவிட்டு ஆராய்ந்தால்தான் எல்லாவற்றிலும் சரியான முடிவு கிடைக்கும். பற்று என்றாலே biased (முன்முடிவு, ஒருபக்கம் சார்ந்திருத்தல்). எனவே பற்றுகளை அறுப்பது அனைவருக்குமே நல்ல முடிவுகளைத் தரும். பற்று என்பது கண்கட்டி வித்தைப் போன்றது. இதை “அது” போலக் காட்டும். “அது” என்று சென்றால் வேறோன்றாக இருக்கும்! அலைபாய வைக்கும்; நிதானம் தவறும்; நிலை குலைய வைக்கும்.
காமம், சினம், மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய பற்றுகள் அழியும்.
பற்றுகள் முற்றாக ஒழிந்துவிட்டால் அதன் பின்னர் காமம் சினம், மயக்கம் போன்றவை பெரு நெருப்பின் முன் சிறிய பஞ்சுப் பொதிபோலப் பொசுங்கிவிடும் என்ற கருத்தை முடிவுரையாகச் சொன்னார். இந்தக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 01/04/2021. மீள்பார்வைக்காக அந்தக் குறள்:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். - 360; - மெய் உணர்தல்
மெய் உணர்தலைத் தொடர்ந்து துறவறவியலின் இறுதி அதிகாரமாக அவா அறுத்தல் வைத்துள்ளார். அவா அறுத்தல் குறித்து ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 30/04/2022, 04/12/2023, 20/01/2024, 21/01/2024, 26/01/2024, 04/02/2024.
பெரும்பாலான சமயங்கள் மறுபிறப்பைக் குறித்துப் பேசுகின்றன. மறுபிறப்பிற்கு காரணம் அவா என்றும் குறிக்கின்றனர். அலைபாயும் மனத்தோடு இறந்தால் அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள அந்த உயிர் மீண்டும் பிறப்பெடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த ஆமே. - பாடல் 2615; திருமந்திரம் (ஞா. மாணிக்கவாசகனார் உரை, உமா பதிப்பகம்)
புத்தர் பிரான் நான்கு உண்மைகளைச் சொல்கிறார். அவை யாவன: 1. துன்பம் – வாழ்வியலில் துன்பம் ஓர் இன்றியமையாப் பகுதி; 2. துன்பத்தின் தோற்றம் – தன்னலம் கலந்த ஆசை; 3. துன்பத்தை ஒழித்தல் – ஆசையை ஒழிக்கத் துன்பம் மறையும்; 4. அட்டசீலம் – ஆசையை ஒழிக்க எண் வழிமுறைகள்.
அவாவை அறுக்க புத்தர் பிரானின் எட்டு வழிமுறைகளாவன: 1. நல்ல பார்வை; 2, நல்ல எண்ணம்; 3. நல்ல பேச்சு; 4. நல்ல செயல்; 5. நல்ல வாழ்க்கை; 6. நல்ல முயற்சி; 7.நல்ல சாட்சி; 8. நல்ல தியானம்.
அஃதாவது, எண் வழிமுறைகளைச் சுருக்கி, நம் பேராசான் மனம், மொழி, மெய்களால் அற வழியில் நிற்றல் என்கிறார். அஃதே அவாவை அறுக்கும் வழிமுறை.
கடவுளை எங்குத் தேட வேண்டும் என்று திருமூலப் பெருமான் எட்டாம் தந்திரத்தில், அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தில் தெரிவிக்கிறார்.
இறைவன் மாடத்திலும் இல்லை; மண்டபத்திலும் இல்லை; கூடத்திலும் இல்லை; கோயிலிலும் இல்லை; பலவான வேடத்திலும் இல்லை; வேட்கையைவிட்டார் உள்ளத்திலேயே இருக்கிறான்; முத்தியையும் தருகிறான். இறைவனைக் காண ஒரே வழி அவா அறுத்தல் என்கிறார் திருமூலர் பெருமான்.
மாடத்து உளான்அலன் மண்டபத்தான் அலன்
கூடத்து உளான்அலன் கோயில்உள்ளான் அலன்
வேடத்து உளான்அலன் வேட்டைவிட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே. – பாடல் 2614; திருமந்திரம் (ஞா. மாணிக்கவாசகனார் உரை, உமா பதிப்பகம்)
ஆக உயரிய ஞானம் அவா அறுத்தல் என்பதனால் துறவறவியலின் இறுதி அதிகாரமாக நம் பேராசான் அமைத்துள்ளார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Earlier while mentioning மீள்பார்வைக்காக you used to give a link in addition to the date If it is not of inconvenience may i request to give that also so that back reference is easier. Thank you.