23/06/2022 (482)
சொந்தக் காசுலே சூன்யம் வைத்துக் கொள்வதைப்பற்றி அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கார் நம் பேராசான்.
ஒருவருக்கு உன் கிட்ட ‘அது’ இல்லை, ‘இது’ இல்லைன்னு சொல்லுங்க கோபம் அவ்வளவாக வராது. நீ ஒரு தண்டம் இப்படியெல்லாம் கடிஞ்சாலும் ரொம்பக் கண்டுக்க மாட்டாங்க! ஆனால்…
‘அறிவு இருக்கா?’ ன்னு மட்டும் கேட்டுப்பாருங்க, யாராக இருந்தாலும் கோபம் வரும். உடனே, நம்மகிட்ட சண்டைக்கு வருவாங்க. “யாரைப் பார்த்து அறிவு இருக்கான்னு கேட்டன்னு … ஆரம்பிச்சு, நம்ம பரம்பரைக்கே அறிவு இல்லைன்னு வம்புக்கு இறங்குவாங்க.
எதற்கு சொல்லவருகிறேன் என்றால், மனிதனுக்கு அழகு மானமும், அறிவும்தான். நம்ம எல்லாருக்கும் அறிவு இருக்கு. என்ன ஒன்று, அதைப் பல திரைகள் போட்டு மறைத்து வைத்திருக்கிறோம். அதற்கு நம் அறியாமைதான் காரணம்.
நாம் போற்றும், அந்த அறிவுக்கு யாராவது சொந்தக் காசில் புதைக்குழித் தோண்டி அது வெளியவே எட்டிப் பார்க்கக்கூடாதுன்னு புதைத்துவிடுவார்களா?ன்னு ஒரு கேள்வியைக்கேட்டு அந்த மாதிரி கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது என்கிறார் நம் பேராசான்.
யார் அந்தக் கூட்டம் என்றால், போதைக்கு அடிமையானவர்கள்தான்!
என்ன பண்ணுவது என்று தெரியாமல், சும்மா bore (சலிப்பு) அடிக்குதுன்னு காசை செலவு செய்து, தண்ணி அடிச்சுட்டு எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு போவதைபற்றி நான் என்ன சொல்ல என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
“கையறியாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறியாமை கொளல்.” --- குறள் 925; அதிகாரம் - கள்ளுண்ணாமை
பொருள் கொடுத்து மெய்யறியாமை கொளல் = காசைக் கொடுத்து அறிவைத் தொலைப்பது; கையறியாமை உடைத்தே = பயன் உள்ள செயல்களை செய்யும் வகை அறியாமையைத்தான் அது குறிக்கிறது.
எவ்வளவோ செய்ய இருந்தும், எதுவுமே செய்யமுடியாத நிலைக்கு போக சொந்தக் காசை செலவழிக்கும் குடிமகன்களை என்ன சொல்ல?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
True one's intellect gets blunt.