12/09/2021 (201)
பார்க்கும் போது பார்க்காத மாதிரி நடிக்க வேண்டியது; பார்க்காத போது பார்த்து சிரிக்க வேண்டியது; இது என்ன விளையாட்டுன்னு அண்ணன் யோசனையில இருக்காரு. அப்போது, ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது. ஒரு கணநேரம்தான். அவளேதான், லேசா என்னை நேராகப் பார்த்து கண்ணை மட்டும் சுருக்கி மெல்ல சிரிக்கிறாள். அண்ணனுக்கு வேண்டிய குறிப்பு கிடைத்துவிடுகிறது.
“குறிகொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.” --- குறள் – 1095; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
குறிகொண்டு நோக்காமை அல்லால் = (அவள் என்னை) நேராக எல்லோருக்கும் தெரியும்படி பார்க்கவில்லை அவ்வளவுதான், ஆனால்; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் = ஒரு கண்ணை சுருக்கி சிரித்ததிலிருந்து எனக்கு தெரிந்துவிட்டது; சிறக்கணித்தல் = சிறங்கணித்தல் = சுருங்குதல்
இப்போது, பேச்சு தொடங்கிடுச்சு. உரிமை அதிகமாயிடுது. உரிமை அதிகமானாலே ஊடலும் தொடங்கிடுது. அதுக்கு ஏதாவது காரணம் வேண்டுமா என்ன? சும்மாவே, ஒரு சீண்டல், ஒரு பிணக்கு … அது உண்மையான வார்த்தைகள் இல்லைன்னு எனக்குத்தெரியும்ன்னு மனம் சொல்லும். அந்த மாதிரி ஒரு நிலை! அந்த உண்மை சீக்கிரமே வெளிப்படும் …
“உறாஅ தவர்போல சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.” --- குறள் 1096; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
உறாதவர் போல்= அயலார், யாரோ தெரியாதவர் போல; சொலினும் = சொன்னாலும்; செறார் = வெகுளாதவர்; செறார் சொல்= கோபம் கொள்ளாதவர் சொன்ன சொல் (என்று); ஒல்லை = சீக்கிரமாகவே; உணரப்படும் = தெரிந்துவிடும்
ஓருத்தரை நமக்கு பிடித்துவிட்டால், அவர் என்ன பண்ணாலும் அதற்கு ஏற்றார் போல் நமது மனது சமாதானம் படுத்திடும். அதுதான் பாச மயக்கம். பாச மயக்கமே அப்படியென்றால், காதல் மயக்கம் எப்படியிருக்கும்?
இந்த நிலை இருவருக்கும் பொது. அண்ணனும் அவளும் ஒரே நிலை என்று குறிப்பால் உணர்த்துகிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.
Comentários