25/10/2021 (244)
குறிப்பறிதல் (71) அதிகாரத்தில் முதல் மூன்று குறள்களில் அதனின் சிறப்பை கூறியிருந்தார். குறிப்பறிபவர்கள் இந்த உலகத்துக்கே அணிகலன் என்றார் (701). குறிப்பறிபவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் என்ற குறிப்பைக் காட்டினார்(702). எதைக் கொடுத்தாவது குறிப்பறிதல் கைவரப் பட்டவர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்(703).
இப்போது தொடர்ந்து வரும் இரண்டு குறள்கள்(704, 705) மூலம் குறிப்பறிதல் இல்லை என்றால் அது எவ்வளவு நல்லா இருக்காது என்று சொல்லப் போகிறார்.
அதற்கு முன்னால் நாம கல்லாமை எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்க்கலாம்.
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை யவர்.” --- குறள் 410; அதிகாரம் - கல்லாமை
விலங்கொடு மக்கள் அனையர் = விலங்கொடு நோக்க மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா (என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்); இலங்கு நூல் கற்றாரொடு = நூலை விளங்குமாறு நன்றாக கற்று மேம்பட்டவர்களோடு மற்றவர்களை ஒப்பிட்டால் அறிந்து கொள்ளலாம்.
விலங்கொடு நோக்க மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலை விளங்குமாறு நன்றாக கற்று மேம்பட்டவர்களோடு மற்றவர்களை ஒப்பிட்டால் அறிந்து கொள்ளலாம் என்று கல்வியின் சிறப்பை எதிர்முகமாக சொல்கிறார்.
விலங்கோடு ஏனையவர்; கற்றாரோடு மக்கள் – இப்படி பொருள் எடுக்கனும். இதற்குப் பெயர் மயக்க நிரல் நிரை அணி அல்லது எதிர் நிரல் நிரை அணி.
சரி, ஏன் இந்த குறள் இப்போ? காரணம் இருக்கு. குறிப்பறிதல் இல்லை என்றால் அவர்கள் தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் அவங்க எல்லாம் மனசனே இல்லை என்கிறார். மனசு இருப்பதால்தான் மனுசன். அவங்க விலங்குகள் மாதிரின்னு சொல்லாமல் சொல்கிறார்.
“குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போர் அனையரால் வேறு.” --- குறள் 704; அதிகாரம் – குறிப்பறிதல்
குறித்து கூறாமைக் கொள்வாரோடு = மனதினை அறியும் மதி நுட்பம் இல்லதாவர்களோடு (ஓப்பிட்டு நோக்கினால்); ஏனை உறுப்பு ஓர் அனையரால் = உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும்; வேறு = (ஆனால் அவர்கள் வேற மாதிரி. நான் சொல்ல மாட்டேன். அவங்க விலங்குகள்ன்னு நீங்க நினைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.
பொருள்: மனதினை அறியும் மதி நுட்பம் இல்லதாவர்களோடு ஓப்பிட்டு நோக்கினால், உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் வேற மாதிரி. நான் என்னவென்று சொல்ல மாட்டேன். அவங்க விலங்குகள்ன்னு நீங்க நினைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.
என்ன ஒரு சுட்டித்தனம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments