22/10/2021 (241)
தூது (69), மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (70) ஆகிய இரண்டு அதிகாரங்களையும் தொடர்ந்து பார்த்தோம். அதனை அடுத்த அதிகாரம் ‘குறிப்பறிதல்’ (71 ஆவது அதிகாரம்.
குறிப்பறிதல் என்ற தலைப்பு கொண்ட மற்றொரு அதிகாரமும் இருக்கு. அது தகை அணங்கு உறுத்தல் என்ற அதிகாரத்தை அடுத்து வருகிறது என்பதனையும், அதில் உள்ள அனைத்து குறள்களையும் நாம ஏற்கனவே அனுபவித்தோம். இடையில் இணைந்தவர்களுக்கு அது இன்பத்துப் பாலில் இருக்கிறது. (இது சிலேடை இல்லை. அப்படி தோன்றினால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல). நாடிப் படித்து நாடியை அறிக. இது நிற்க.
தலைமையிடம் நெருக்கமாயிட்டோம். அடுத்து என்ன வேணும்? என்று ஆராய்ந்து வைத்த அதிகாரம்தான் ‘குறிப்பு அறிதல்’ (71 ஆவது). நமது எண்ணம் நாட்டைப் பிடிப்பதுதான். அவசரப் படாதீங்க. அதற்கு இடையிலே இன்னும் கொஞ்சம் இருக்கு என்பதைப் போல அதிகார அமைப்பு முறை இருக்கு.
குறிப்பறிதலுக்கு(71) அடுத்து அவை அறிதல் (72), அதற்கு அடுத்து அவை அஞ்சாமை (73). அப்புறம் என்ன ‘நாடு’தான் (74 வது அதிகாரம்).
தூது (69), மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (70), குறிப்பு அறிதல் (71), அவை அறிதல் (72), அவை அஞ்சாமை (73), நாடு (74) …
கொஞ்சம் இந்த அதிகார அமைப்பு முறையையும் பார்த்து வைப்போம்ன்னு என் ஆசிரியர் அப்ப, அப்ப கவனம் படுத்துகிறார்.
குறிப்பறிதலின் (71) முதல் குறளை நாம ஒரு தடவை பார்த்து இருக்கோம். மீள் பார்வைக்காக:
“கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.” --- குறள் – 701; அதிகாரம் – குறிப்பறிதல் (71)
குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் = தலைவனின் முகக்குறிகளையும் அவன் கண் காட்டுவதையும் கவனித்து அறிந்து செயல் ஆற்றும் ஆற்றல் கொண்டவன்; எஞ்ஞான்றும் = எப்போதும்; மாறாநீர் வையக் கணி = வற்றாதநீரால் சூழப்பட்ட இந்த உலகத்துக்கு ஒரு அணிகலனாம்.
முகக் குறிப்பை மட்டும் அல்ல அகக் குறிப்பையும்; உடல் குறிப்பை மட்டுமல்ல உள்ளக் குறிப்பையும் அறிவதுதான் குறிப்பறிதல்.
மற்றவர் உள்ளத்தின் உண்மைப் பொருளை உணர முடிந்தால், அந்த உள்ளத்தை தொடமுடியுமானால், அவர்கள் அந்த தெய்வத்திற்கே ஒப்பானவர்கள் என்கிறார் நம் பேராசான். தொடருவோம் நாளை.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires