15/07/2023 (863)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கூற்று என்பது ஒரு மொழி பன்பொருள் வகைச் சொல். அதாவது, இந்தச் சொல்லுக்கு பல பொருள்கள் உள.
“இது அவரின் கூற்று” என்றால் அவரின் ‘முடிவான கருத்து’ என்று பொருள்.
“நரை கூடி கிழப் பருவம் எய்திக் கொடுங் ‘கூற்று’க்கு இரையென ...” என்று மகாகவி பாரதி சொல்கிறார்.
இங்கே, ‘கூற்று’ என்பது மரணம் அல்லது வாழ்கையின் முடிவு.
‘உடன்று’ என்றல் சுத்தி அடிப்பது, சுழன்று அடிப்பது, பயங்கரமானது இப்படியெல்லாம் பொருள் எடுக்கலாம்.
உடன்று என்றால் வெகுண்டு, சினந்து என்றும் பொருள் எடுக்கலாம்.
பெரும் போர்!
நம்மாளு: அது என்ன பெரும் போர், சிறு போர்? போர் என்றால் போர் தானே?
நான்:பெரும் போர் என்று சொன்னால்தான் கவித்துவமாக இருக்கும் என்று சொல்லிவிட்டேன். சரி போர் என்றே வைத்துக் கொள்வோம்.
அந்தப் போரிலே அந்தப் படைக்கு முடிவுக் காலம் என்பது தெளிவாகிவிடுகிறது. அப்படியே இருந்தாலும் அந்தப்படை இறுதி வரை உறுதியாக நின்று ஆற்றலுடன் போரிட வேண்டுமாம். அது தான் தம்பி, படை! என்கிறார்.
ஏன் என்றால் கடைசி நொடி வரை வெல்வதற்கு வாய்ப்புகள் வரலாம் என்பது பொருள். அஞ்சி புறமுதுகிட்டால், ஆங்கே, தோல்வியை நாமே உறுதி செய்துவிடுகிறோம். Winners never quit; Quitters never win.
“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.” --- குறள் 765; அதிகாரம் – படை மாட்சி
கூற்று உடன்று மேல் வரினும் = முடிவு படு பயங்கரமாக நம்மை நோக்கி எதிர் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை = ஒற்றுமையுடன் தளராமல் எதிர்த்து இறுதிவரை உறுதியோடு நிற்கும் ஆற்றல் கொன்டதுதான் படை.
முடிவு படு பயங்கரமாக நம்மை நோக்கி எதிர் வந்தாலும் ஒற்றுமையுடன் தளராமல் எதிர்த்து இறுதிவரை உறுதியோடு நிற்கும் ஆற்றல் கொன்டதுதான் படை.
கூற்றுடன்று என்பதற்கு கூற்றுவன் உடன்று என்று பிரித்து, கூற்றுவன் என்றால் எமன் என்றும் உடன்று என்றால் சினந்து என்றும் பொருள் கொண்டு எமன் சினந்து என்றும் அறிஞர் பெருமக்கள் பொருள் காண்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios