21/05/2022 (449)
ஆற்றலில் பெரியவர்களாகிய அரசிடமோ, அரசர்களிடமோ வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதைச் சொல்வதற்காக இரண்டு குறள்கள் வைத்துள்ளார். ஆற்றலில் பெரியவர்களை “ஆற்றுவார்” என்று குறிக்கிறார்.
இங்கே பெரியார் என்பது ஆற்றுவார்.
“கெடல் வேண்டின் கேளாது செய்க” என எச்சரித்தார் குறள் 893ல். மேலும் தொடர்கிறார்.
அதாவது, ஆற்றுபவர்களிடம் வம்புக்கு போவது என்பது “சொந்த முயற்சியிலே சூனியம் வைத்துக் கொள்வது போல” என்கிறார்.
ஆற்றல் இல்லாதார் ஆற்றுவாரிடம் வம்புக்குப் போவது, தன் அழிவைத் தானே கையை விரித்து வா, வா என்று அழைப்பது போல என்கிறார்.
‘கூற்றம்’ என்றால் முடிவு, சாவு, அழிவு.
“கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.” ---குறள் 894; அதிகாரம் – பெரியாரைப்பிழையாமை
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் = ஆற்றல் உடையவர்களிடம் ஆற்றல் இல்லாதவர்கள் இன்னா செய்வது, அதாவது வம்புக்குப் போவது, அவர்களை பழிப்பது போன்ற செயல்களைச் செய்வது;
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் = தன் அழிவைத் தானே கையை விரித்து அழைப்பதுபோல
நாம் பார்த்த இரண்டு பாடல்கள் மூலம் அரசு, அரசர்களிடம் வாலை நீட்டினால் வரும் குற்றங்களைச் சொல்வது.
அப்போ, வலியவர்களிடம் அடங்கித்தான் போகனுமா? மெலியோர்களை வலியோர்கள் வதைப்பதுதான் முறையா? என்றால் அது வேறு, இது வேறு. இங்கே குறிக்கப்படுவது, பண்பில், ஆற்றலில் பெரியார்களைப் பற்றி. மற்றவர்களை நசுக்க நினைக்கும் வலியார்களைப் பற்றி அல்ல.
வலியவர்களிடம் போராடவும்கூட களமும், காலமும் நாம்தான் குறிக்க வேண்டும். அங்கேயும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றால் எண்ணம் நிறைவேறாது. எப்படி இருந்தாலும் சுதானமாக இருப்பது பிழைக்க வழி என்பதை மட்டும் மனதில் நிறுத்த வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments