top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கூற்றமோ கண்ணோ ... 1085, 1179

31/08/2022 (550)

‘அஞர்’ என்றால் துயரம் என்று பார்த்தோம். ‘நடுங்கு அஞர் செய்யல மன் இவள் கண்’ என்று அவன் புலம்பியதை எடுத்து வைத்தார் நம் பேராசான் தகை அணங்கு உறுத்தலில்.


இதே போன்று அவள் புலம்புவதையும் நாம் பார்த்துள்ளோம்.


அவர்களுக்குள்,களவியல் முடிந்து கற்பியலில் இணைந்தும்விட்டார்கள்.

அவர் வந்தாலும் என் கண்கள் தூங்காமல் அஞர் கொடுக்கிறது. அவர் வராவிட்டாலும் தூங்க மறுத்து அஞர் கொடுக்கிறது என்று புலம்புகிறாள்.

மீள்பார்வைக்காக காண்க 09/03/2022 (376).


வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.” --- குறள் 1179; அதிகாரம் - கண்விதுப்பு அழிதல்


அவர் வரவில்லை என்றாலும் தூங்காது; அவர் வந்துவிட்டாலும் எப்போது போய் விடுவாரோ என்று தூங்காது; அந்த இரண்டு வழியும் பெரிய துயரம் உறுகிறது என் கண்.


வாராக்கால் துஞ்சா = அவர் வரவில்லை என்றாலும் தூங்காது; வரிந்துஞ்சா = அவர் வந்துவிட்டாலும் தூங்காது; ஆயிடை = அந்த இரண்டு வழியும்; ஆர் =அரிய, பெரிய; அஞர் = துயர், துயரம்; உற்றன கண் = உறுகிறது என் கண்.


இது நிற்க.


‘மடவரல்’ என்ற சொல் பண்டை இலக்கியங்களில் இளம் பெண்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது. இதன் பொருள் Innocent girl. அதாவது அப்பாவி பெண்களாம்!


அவன்: இந்த மடவரலின் கண்கள் எமனா இல்லை, அது என்னை நோக்கிப் பார்ப்பதால், அன்பு நிறைந்த கண்கள்தானா? இல்லை, இல்லை அது பொதுவாகவே மிரட்ச்சியைக் காட்டும் பெண் மானின் கண்களைப் போன்றதா?


இல்லை, இது மூன்றும் சேர்ந்தக் கலவையா?


நம்மாளு: அண்ணன் கலக்கத்துக்கு ஒரு அளவேயில்லை!

அண்ணே, எந்தக் குறள் அது?


கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம் மூன்றும் உடைத்து.” --- குறள் 1085; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்


எமனா, அன்பு நிறை கண்களா, மிரட்ச்சியைக் காட்டும் பெண்மானின் கண்களா; அந்தப் பார்வையில் இந்த மூன்றும் இருப்பது போலத் தோன்றுகிறது.


கூற்றமோ கண்ணோ பிணையோ = எமனா, அன்பு நிறை கண்களா, மிரட்ச்சியைக் காட்டும் பெண்மானின் கண்களா;

மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து = அந்தப் பார்வையில் இந்த மூன்றும் இருப்பது போலத் தோன்றுகிறது.


(பிணை என்றால் பெண் மான். கலை என்றால் ஆண் மான்.)


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




4 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page