12/07/2022 (501)
எனதருமை ஆசிரியர் இன்னும் வரவில்லை!
பொருட்பாலில் மூன்று இயல்கள். அவையாவன: 1. அரசியல்; 2. அங்கவியல்: மற்றும் 3. ஒழிபு இயல்.
சூது (94ஆவது அதிகாரம்) என்ற அதிகாரத்தைத் தொடர்ந்து வருவது மருந்து (95ஆவது அதிகாரம்). மருந்து அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். அங்கவியலில் கடைசி அதிகாரம் மருந்து. அதிகார அமைப்பு முறைகளை நாம் ஏற்கனவே ஒரு முறை பார்த்துள்ளோம்.
மீள்பார்வையாக:
ஒழிபு இயலில் அதிகாரங்கள் மொத்தம் 13. வேறு எங்கும் சொல்லப்படாதவை இந்த இயலில் இருப்பதால் ‘ஒழிபியல்’.
இந்த இயலில் வள்ளுவப் பெருமான் எடுத்துரைப்பது குடிமக்களை ஒட்டியே அமைந்துள்ளது. குடிமக்கள் செய்ய வேண்டியவை: குடிமை(96), மானம் (97), பெருமை (98), சான்றாண்மை (99), பண்புடைமை (100), நன்றியில் செல்வம் (101), நாணுடைமை (102), குடிசெயல்வகை (103), உழவு (104) என்ற ஒன்பது அதிகாரங்களும்,
குடிமக்கள் தவிர்க்க வேண்டியவை: நல்குரவு (105), இரவு (106), இரவச்சம் (107), கயமை (108) ஆகிய நான்கு அதிகாரங்களுமாக அமைந்துள்ளது.
இது நிற்க. ஒருவனின் இயல்புகளுக்கு பெரிதும் காரணமாக இருப்பது மனத்திண்மையா (will power), இல்லை, அவன் இருக்கும் சூழலா (environment)?
இது ஒரு சிக்கலானக் கேள்வி. நமது வெற்றி, தோல்விகளுக்கு, நாம் எடுக்கும் முடிவுகளுக்கு, நமது சூழல் பெரும் பங்கு வகிக்கும். சூழலை மாற்றினால் மனம் மாறும். மனம் மாறினால் உயரலாம் என்பது நாம் அனைவரும் உணர்ந்ததே.
கண்ணில் இருந்து மறைவது கருத்தில் இருந்தும் மறையும். Out of sight is out of mind.
சூழலை (comfort zone) மாற்றவும் மனத்திண்மை வேண்டும்! இரண்டும், இரு தண்டவாளங்களைப் போல இணைந்தே செல்லும்.
பிறப்பை நாம் தீர்மானிக்க முடியாது. வளருவதை நாம் தீர்மானிக்கலாம்.
இதைத் தொடர்ந்து சிந்திக்கும்போது, எனக்குள் எழும் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சாதி என்றால் என்ன? குலம் என்றால் என்ன? குடி என்றால் என்ன? இவைகள் அனைத்தும் ஒன்றையே குறிக்கிறதா? அல்லது வெவ்வேறா?
உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கவும்.
ஆசிரியர் இன்னும்ம்ம் வரவில்லை…
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Komentarze