24/07/2022 (513)
அறத்துப்பாலில், இல்லறவியலில், ஓழுக்கமுடைமை என்பது 14ஆவது அதிகாரம்.
அறத்துப்பாலில், துறவறவியலில் வாய்மை என்பது 30ஆவது அதிகாரம்.
பொருட்பாலில், ஒழிபு இயலில், நாணுடைமை என்பது 102 ஆவது அதிகாரம்.
“ஒழுக்காமா இரு!” எனபதில் பல பொருள்கள் அடங்கிக் கிடக்கின்றன. ஒழுக்கம் எனபது ஒரு மேலானப் பொருள். அது உயர்ந்த இடத்தில் இருந்து கீழ்நோக்கி பரவுவதால் அதை ஒழுக்கு என்கிறார்கள். அதுவும் எப்படி? அது தொடர்ந்து நடக்க வேண்டும். அப்போதுதான் அது ஒழுக்கு.
குடிமை என்றால் என்ன? நம்பேராசான் பதில் சொல்கிறார் இவ்வாறு:
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.” --- குறள் 133; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
ஓழுக்கமாக இருந்தால், அந்த குடியினுள் இயைந்து இருக்க இயலும்(fit). இல்லை என்றால் இழி பிறவியாய் கருதப்பட்டு ஒதுக்கப்படுவாய் (misfit).
ஒழுங்கு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் மனதிலிருந்து, எண்ணங்களிலிருந்து.
வாய்மை என்றால்?
“வாய்மைஎனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.” --- குறள் 291: அதிகாரம் – வாய்மை
தீமை இலாத சொலல்தான் வாய்மை. அதாவது, பேச்சிலிருந்து ஆரம்பிக்கிறது வாய்மை.
நாணம் என்றால் என்ன?
நாணம் என்றால் பழிக்கு அஞ்சுவது. பழி வரும் என்று தெரிந்தால் அச்செயல்களைத் தவிர்ப்பது. நாணம் இருந்தால் செயல்கள் நல்லதாக அமையும்.
“நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.” --- குறள் 1020; அதிகாரம் – நாணுடைமை
நாண்அகத்து இல்லார் இயக்கம் = பழிக்கு அஞ்சாதவர்களின் இயக்கம்; நாணால் = கயிற்றால்; மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று =மரத்தால் செய்த பொம்மையை கயிற்றால் இயக்கினால் உயிர் உள்ளது போலத் தெரியும். ஆனால், அதில் உணர்ச்சி இருக்காது.
நாணம் இல்லாவிட்டால் zombie போலத் திரிவார்கள்.
மேலே கண்ட மூன்று குறள்கள் மூலம் மனம், மொழி, மெய் ஆகியவைகளில் உயர்வு இருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
இந்த மூன்று பண்புகளையும் ஒரு சேரச் சொல்கிறார், நம் பேராசான், இந்தக் குறளில்:
“ஓழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார்.” --- குறல் 952; அதிகாரம் – குடிமை
இழுக்கார் = கை விடார்.
நல்ல குடியில் இருக்கனுமா, இந்த ஒழுக்கம், வாய்மை, நாணம் என்ற மூன்று பண்புகளையும் கை விட்டுடாதீங்க என்கிறார்.
அதாவது, மனம், மொழி, மெய்களில் சுத்தம் இருக்க வேண்டும் என்கிறார். அதுதான் குடிமைக்கு அழகு.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments