07/01/2023 (674).
கொலை செய்பவர்களே மேல் என்கிறார் நம் பேராசான்.
ஆங்...! என்ன அப்படியும் சொல்லி இருக்கிறாரா?
கொலை என்பது கொடுமையின் உச்சம் என்பது நமக்குத் தெரியும்.
“உயிருக்கு ஊறுகண் செய்யாமை அறம்” என்று சொன்ன நம் பேராசான் எப்படி கொலை செய்பவர்களே மேல் என்று சொல்வார்?
ஆச்சரியமாக இருக்கிறதே! சும்மா, அடித்து விடாதே என்கிறீர்களா?
இல்லை. உண்மையாகவே சொல்லியிருக்கிறார்.
எப்படி என்றால், ஒரு தலைவன் அல்லது அரசன், தன் கஜானா (பணப் பெட்டி) நிறைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அநியாயமாக வரிகளை விதித்து, மக்களை வருத்தி, அலைய வைப்பவன் கொலையைத் தொழிலாகக் கொண்ட
வேடுவர்களைவிட கீழானவன் என்கிறார். அவர்களோ, தன் வயிற்றுப் பாட்டிற்கு கொலையை மேற்கொள்கின்றனர். இவன், தனது பேராசைக்கு குடிகளை வருத்துகிறான்.ஆதலினால், மிகக் கொடியவன் என்கிறார்.
“கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற் கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.” --- குறள் 551; அதிகாரம் – கொடுங்கோன்மை
அலைத்தல் = வருத்துதல்; அலை மேற்கொண்டு = பொருட்களை விரும்பி அலைத்தலைத் தொழிலாகக் கொண்டு; அல்லவை செய்தொழுகும் வேந்து = அநியாயங்களைச் செய்யும், அடித்துப் பிடுங்கும் தலைவன்;
கொலை மேற்கொண்டாரின் கொடிதே = கொலையைத் தொழிலாகக் கொண்டு ஒழுகுபவர்களைவிட கொடியவன்.
பொருட்களை விரும்பி அலைத்தலைத் தொழிலாகக் கொண்டு, அநியாயங்களைச் செய்யும், அடித்துப் பிடுங்கும் தலைவன், கொலையைத் தொழிலாகக் கொண்டு ஒழுகுபவர்களைவிடக் கொடியவன்.
குறிப்பு:
“வேந்தன்” எனும் உயர்திணைக்குப் பதில் “வேந்து” என்று அஃறிணையைப் போட்டுள்ளார்.
“கொலைத் தொழிலை மேற்கொள்பவர்கள்” என்று பன்மைப்பால் உவமானமாக வருகிறது. ஆனால், ‘வேந்து’ என்று ஒருமைப்பால் உவமேயமாக வந்துள்ளது. இதனை “பால் மயக்கு உறழ்ச்சி” என்று தமிழ் இலக்கணத்தில் சொல்கிறார்கள். சும்மா, கொஞ்சம் இலக்கணத்தையும் தெரிந்து வைப்போமே!
இன்றைய குறள் உரை இத்துடன் நிறைவு பெறுகிறது.
நன்றி, வணக்கம்.
நேரமிருப்பவர்களும், மனத்திடம் உள்ளவர்களும் மேலும் தொடரலாம் – நீளும் பதிவு. எச்சரிக்கை!
பிறப்புகளின் வரிசையில், மனிதர்களில் சிலர் தெய்வமாகப் பிறக்கிறார்கள்; சிலர் வேடுவர்களாகப் பிறக்கிறார்கள். பிறப்பொக்கும் என்றார் நம் பேராசான். ஆகையால், அவர்கள் மேல் என்றோ, இவர்கள் கீழ் என்றோ நாம் சொல்வது தவறு. மேலும், இவன் கடந்தப் பிறப்பில் அல்லன செய்தான் அதனால் இந்தப் பிறப்பில் அனுபவிக்கிறான் என்பதும் தவறு.
அதற்கு உதாரணமாகத்தான், முருகக் கடவுள் தெய்வமாக பிறந்த தெய்வானையையும், வேடுவ குலத்தில் வளர்ந்த வள்ளியையும் மணம் புரிந்தார் என்றும் சொல்கிறார்களாம். இது நிற்க.
காரணமின்றி(cause) காரியம்(effect) இல்லை என்பது சற்காரிய வாதம் என்பதை நாம் சிந்தித்துள்ளோம். காண்க -24/04/2022 (422). அதனை மறுப்பவர்களும் உண்டு. அதில் அன்மைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பெட்ரண்ட் ரசல் (Bertrand Russel 1872 - 1970) எனும் பெருமானார் கேட்கும் கேள்வி சிந்திக்கத் தக்கது.
எனது தாத்தா தெரியும். அவரின் தாத்தா ஒருவர் இருந்திருக்க வேண்டும். அதுவும் சரி. இப்படியே, பின் நோக்கிப் போனால் அந்த முதல் தாத்தா என்று ஒருவர் இருந்து இருப்பார். அவர் நமக்குத் தெரியாது என்பதாலேயே அவர் இல்லை என்று மறுப்பதற்கில்லை! அதுவும் சரி. ஆதலினால், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்! என்கிறார்கள்.
இது எப்படி சரியாகும் என்று எதிர் கேள்வி எழுப்புகிறார் நம் பெட்ரண்ட் ரசல் பெருமானார். அந்த ‘முதல் தாத்தா’ எப்படி வந்தார் என்றும் கேட்கிறார்.
இதற்கு எப்படி பதில் அளிப்பது? இதைத்தான் First Cause problem என்கிறார். ஆகையினால் இந்த முதல் பொருள் வாதம் அடிபட்டுப் போகிறது.
சரி என்ன சொல்ல வருகிறாய்? கடவுள் இருக்கிறார? இல்லையா? ஒழுங்காகச் சொல்லு என்று கேட்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு விடைகாண யுகக் காலத்திற்கு மேலும் ஆகலாம் என்று கூறிவிட்டுத்தான் அவரது “Why I am not a Christian?” என்ற புகழ் வாய்ந்த உரையை ஆரம்பிக்கிறார் நம் பெட்ரண்ட் ரசல் பெருமானார்.
எனினும், இந்தப் புதிருக்கு, நமது சைவ சித்தாந்தம் பதில் சொல்கிறது என்றார் என் ஆசிரியர். மேலும் ஒன்று சொன்னார். இப்போது இதைச் சொல்லாதே என்று மேலும் ஒரு கருத்தையும் சொன்னார். இருந்தாலும், ராமானுஜப் பெருமானைத் துணைக் கொண்டு உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். அதாவது, நம்மையெல்லாம் கடவுள் படைக்கவில்லையாம்!
நம்மாளு: ம்ம்... அப்படியா?
ஆசிரியர் பின்னர் சிந்திப்போம் என்றார். அதுவரை பொறுத்திருப்போம்!
மீண்டும் சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments