18/02/2022 (357)
“மணியில் திகழ்தரு நூல்” போல அவள் மறைக்க முயல்கிறாள் என்ற அவன், அது தோழிக்கு இன்னும் விளங்குமாறு சொல்ல வேறு ஒரு உவமையைத் தேடுகிறான். ஒரு தோட்ட்தில் அமர்ந்து இருந்தான் போல இருக்கிறது. மனம் வீசும் மல்லிலைகைக் கொடி. அதிலே கொத்து கொத்தாக மல்லிகை மொக்குகள்.
அவன் யோசிக்கிறான். அவள் சொல்லியதாக நீ தெரிவித்தது எனக்கு கவனம் இருக்கிறது.
“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய்.” --- குறள் 1227; அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல்.
இன்னும் சிறிது நேரம்தான் இந்த மொக்குகள் மலர. மலரந்தும் அதில் உள்ளே ஓளிந்திருக்கிற நறுமனம் வெளிப்படும். அது போலத்தான் அவளும். அவள் ஒளித்து வைத்திருக்கிற செயல் வெளிப்படத்தான் போகிறது என்று நினைத்த அவன், தோழியிடம்:
இதோ இருக்கிறதே இந்த மல்லிகை மொக்குகள் மனத்தை ஒளித்து வைத்திருப்பது போலத்தான் என்னவளும். அவளும், தன்னுள்ளே ஒன்றை மறைத்து வைத்துள்ளாள். அது ஒருவாறு எனக்குத் தெரிந்தாலும் உறுதியாகச் சொல்ல முடியவல்லை. அது என்னவென்று நீ அறிந்து சொல்ல முடியுமா? என்பது போன்ற குறள்:
“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு.” --- குறள் 1274; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
முகை மொக்குள் = மலரும் பருவத்தில் உள்ள மொக்குள்; நாற்றம் உள்ளது போல் = மனம் உள்ளே வெளிப்படாமல் இருப்பது போல; நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு = (அவள்) சிரிக்கச் சிந்திக்கும் சிரிப்பினுள்ளும் ஒரு குறிப்பு இருக்கிறது
அது என்ன? கொஞ்சம் கேட்டுச் சொல்வாயா? என்கிறான் தோழியிடம்.
தொடர்ந்து எப்படி எடுத்துச் செல்கிறார் நம் பேராசான் என்று நாளை பார்க்கலாம்.
மல்லிகைக்கு ஆங்கிலத்தில் Jasmine என்கிறார்கள். Jasmine என்பது பாரசீக மொழியில் இருந்து வந்துள்ளதாம். ‘யாஸ்மின்’ என்ற சொல்லில் இருந்து வந்ததாம். ‘யாஸ்மின்’ என்றால் கடவுளின் பரிசாம். – சும்மா ஒரு கூடுதல் தகவல்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments