12/12/2023 (1011)
அன்பிற்கினியவர்களுக்கு:
துறவறவியலில், அருளுடைமை என்ற முதல் அதிகாரத்தை அடுத்துப் புலால் மறுத்தல் அதிகாரம்.
அனைத்து உயிர்களின் மேல் அன்பு செலுத்துதல் அருளுடைமையாம் என்றார். இஃது, துறவில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு அடிப்படைக் கடமை. துறவறவியலில் அடியெடுத்து வைப்பவர்கள் யார்?
நம்மாளு: ஐயா, இல்லறத்தில் தங்களின் கடமைகளைச் செய்யும்விதமாக நன்றாக உழைத்து, அதன் பின், அடுத்த தலைமுறை தொடரட்டும் என்று வழிவிட்டு ஒய்வெடுக்கும் பருவத்தில் நுழைபவர்கள்தாம் துறவறவியலில் அடியெடுத்து வைப்பவர்கள்.
நன்று. அவர்கள் மற்ற உயிர்களும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும். அதன் பொருட்டு புலால் மறுத்தல் என்பது முதல் நிலை. புலால் உண்பது உயிர்களைக் கொல்வதற்குக் காரணமாகவும், அக்கொலைச் செயல் தொடர்ந்துக் காரியமாகவும் அமைகிறது. இவை, அருள் வழியில் செல்பவர்களுக்கு இயைந்தவை அல்ல. எனவே அருளுடைமையின் பின் வைக்கப்பட்டது.
அந்த அந்தப் படி நிலைகளில் அந்த அந்த ஒழுக்கலாறுகள்! அனைத்துப் படி நிலையினர்க்கும் ஒரே ஒழுக்கம் என்பது எங்ஙனம் ஏற்புடையதாக இருக்கும். திருக்குறளில் அந்தத் தெளிவு இருப்பதனால்தான் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. செயல் நடைபெறும் இடத்தைப் பொதுப்படக் கூறியதால், மேலும் அது உலகப் பொதுமறையாகவும் கொண்டாடப் பெறுகிறது.
அறிஞர் சிலர், திருக்குறள் எங்ஙனம் உலகப் பொதுமறையாக இருக்க இயலும் என்பர். குறள்களைத் தனித்தனியாகச் சிந்தித்தால் முரண் இருப்பதைப்போல் தோன்றும். அதுவல்ல நம் பேராசான் சொல்லும் வழி. அவர்கள், மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து சிந்திக்கத் தெளிவு பெறுவர் என்பது திண்ணம்.
ஒத்திசைவாய்ப் பொருள் (Harmonious construction) கொள்ளும் முறை குறித்து முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 10/01/2022.
சரி, நாம் புலால் மறுத்தலுக்கு வருவோம்.
95 ஆம் வயதுவரை நிறை வாழ்வு வாழ்ந்தவர் பேரறிஞர் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw). 25 ஆம் வயதுவரை புலால் உண்டவர். அதன்பின் புலாலை மறுத்துவிட்டார். வறுமை ஒரு காரணமாக இருக்கலாம் என்பர் சிலர். ஆனால், அவர் உயர்ந்த நிலைக்கு வந்த பின்பும் அவர் புலாலைத் தொடவில்லை. அவரின் பேச்சுகளும் எழுத்துகளும் நம்மைச் சிந்திக்க வைப்பன.
ஒரு மனிதன் புலியைக் கொல்ல விரும்பினால் அதை விளையாட்டு என்று அழைக்கிறான்; ஒரு புலி மனிதனைக் கொல்ல நினைத்தால், அதை வெறித்தனம் என்று அழைக்கிறான்!
When a man wants to murder a tiger he calls it sport; when a tiger wants to murder a man he calls it ferocity.
ஆன்மீக நாட்டம் கொண்ட ஒருவன் பிணங்களைச் சாப்பிடுவதில்லை.
A man my spiritual intensity does not eat corpses.
புலாலையும் மற்ற தாவர உயிர்களையும் பிரிக்கிறார். அவையும் உயிர்தாம் என்றாலும் ஒரு மாம்பழத்தின் கொட்டையை விதைத்தால் அதில் இருந்து ஆயிரம் மாம்பழங்கள் தோன்றும்விதமாக ஒரு மரம் முளைத்தெழும். ஆனால், ஓர் இறந்த ஆட்டினைப் புதைத்தால் ஒன்றும் நடவாது, அது சிதைந்துப் போவதைத் தவிர!
Think of fierce energy concentrated in an acorn! You bury it in the ground and it explodes into an oak! Bury a sheep, and nothing happens but decay.
இப்படி அவரின் சிந்தனைத் துளிகள் பல. மேலும் ஒரு கருத்தைப் பார்ப்போம்.
நீங்கள் எப்படி மற்ற உயிரினங்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணி அவற்றை அழித்து உணவாக்குகிறீர்களோ அதுபோல, வேறொரு கிரகத்தில் இருந்து சில உயிரினங்கள் பூமியில் தரையிறங்கித் தாங்கள்தாம் உங்களைவிட உயர்ந்தவர்கள். ஆகையினால், நீங்கள் எல்லாரும் எங்களுக்கு உணவு என்று சொன்னால் எப்படி இருக்கும் என்கிறார்.
If a group of beings from another planet were to land on earth – beings who considered themselves as superior to you as you feel yourself to be to other animals – would you concede them the rights over you that you assume over other animals?
இதைத்தான் நம் பேராசான் “வலியார் முன் தன்னை நினைக்க” என்றார். காண்க 11/12/2023. மீள்பார்வைக்காக:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. – 250; - அருளுடைமை
சரி, புலாலை மறுக்க என்ன ஆகும்? எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்கிறார்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். – 260; புலால் மறுத்தல்
கொல்லான் புலாலை மறுத்தானை = பிற உயிர்களைக் கொல்லாமையும், புலாலை உண்ணாதவனையும்; எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் = எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்.
பிற உயிர்களைக் கொல்லாமையும், புலாலை உண்ணாதவனையும் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்.
இரு கூறுகள் இந்தக் குறளில். ஒன்று – உயிர்களைக் கொல்லாமை; மற்றொன்று – புலால் உண்ணாமை. இந்த இரண்டையும் கவனிக்க வேண்டும்.
நான் நேரடியாகக் கொல்லவில்லை, புலால் மட்டுமே உண்கிறேன் என்றாலும் நான் உண்ணவில்லை ஆனால் புலாலை உருவாக்கும் வேலைதான் என்றாலும் சரியல்ல என்கிறார்.
கொன்றால் பாவம்; தின்றால் போச்சு – இது தான் என் கட்சி என்பது என்ன?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments