30/05/2024 (1181)
அன்பிற்கினியவர்களுக்கு:
கொள்கையை இன்னும் கொஞ்சம் விரிக்கத் தோன்றுகிறது.
கொள்கை என்பது நாம் வழி தவறிச் செல்லாமலும், நம் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்திச் செல்வதற்கும் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் ஒரு வரம்பு.
இதனை நிறுவனங்கள் இரு வகையில் பிரிக்கும். அவை யாவன: 1. Mission statement; 2. Vision statement.
Mission Statement (வழி முறை அறிக்கை) என்பது ஒரு நிறுவனம் தன் வணிகத்தையும் அது அடைய வேண்டிய இலக்கினை எந்த வழியில் அடையப் போகிறது என்பதனையும் ஒரு வரையறையாக உருவாக்கிக் கொள்வது.
Vision Statement (இலக்கு அறிக்கை) என்பது வேறு ஒன்றுமல்ல அந்த நிறுவனத்தின் தொலை நோக்குப் பார்வையும், அடைய வேண்டிய இலக்கினையும் தெரிவிக்கும்.
இந்த இரண்டினை Means and Ends என்பார்கள். இரண்டுமே அறம் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். இந்த இரண்டினை இணைத்தால் அதுதான் கொள்கை. தனி மனிதர்களுக்கும் கொள்கை தேவை.
நம்மாளு: ஐயா, சுருக்கமாக கொள்கையைச் சொல்ல முடியுமா?
ஆசிரியர்: என்ன செய்யப் போகிறோம்? அதனை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதுதாம் கொள்கை!
சரி, நாம் குறளுக்கு வருவோம். கொள்கை தவறாக இருந்தால் அல்லது கொண்ட கொள்கையைத் தவற விட்டால் நம்மைச் சுற்றியிருப்பவர்களே நம்மை ஒதுக்குவார்கள். அது மட்டுமன்று நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. – 1019; - நாணுடைமை
நாணின்மை = பழிக்கு அஞ்சாமை;
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் = கொள்கையை விட்டு விலகும் பொழுது நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் பாதிக்கபடுவர்; நாணின்மை நின்றக் கடை நலம் சுடும் = ஆனால், அந்தக் கொள்கை விலகல் பழிக்கு அஞ்சாது பாதகச் செயல்களுக்கு வழி வகுக்குமானால், ஆங்கே, இதுவரை சேர்த்து வைத்த நன்மைகள் அனைத்துமே அழியும்.
கொள்கையை விட்டு விலகும் பொழுது நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் பாதிக்கபடுவர். ஆனால், அந்தக் கொள்கை விலகல் பழிக்கு அஞ்சாது, பாதகச் செயல்களுக்கு வழி வகுக்குமானால், ஆங்கே, இதுவரை சேர்த்து வைத்த நன்மைகள் அனைத்துமே அழியும்.
கொடி கட்டிப் பறந்த பல நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போன பல வரலாறுகள் உள்ளன.
அஃதாவது, பழிக்கு அஞ்சாமல் சென்றால் அடி பலமாக இருக்கும். அஃது நீடித்த விரும்பத்தகாத பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.
பழிக்கு அஞ்சாமல் இருப்பவர்கள் Zombie (சோம்பை) போலத் திரிவார்கள் என்றார். காண்க 24/07/2022. மீள்பார்வைக்காக:
நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. - 1020; - நாணுடைமை
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments