01/01/2022 (310)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
“கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.” --- குறள் 808; அதிகாரம் - பழைமை
மேல் உள்ள குறளுக்கு பல நண்பர்கள் அருமையான விளக்கங்களை அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல.
இரு விளக்கங்கள் குறிப்பிடத்தக்கது.
சிவயோகி சிவக்குமார்: நட்பிற்கு இழக்கு என்று அடுத்தவர் சொல் கேளாமல் உரிமையுடன் நட்பு பாராட்ட வல்லவருக்கு தீங்கு செய்தால் நாளுக்கே இழுக்கு ஏற்படும்.
நண்பர் ஆறுமுகம் ஐயா: நெடுநாள் மிக நெருக்கமாக பழகிய நண்பரைப் பற்றி அவர் செய்த ஒரு தவறான செயலை சுட்டிக்காட்டினால் சிறந்த நட்புரிமையை கடைப்பிடிப்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அந்நாள் ஒரு நல்ல நாளாகும். காரணம் அப்பொழுதுதான் அவர் தன் உண்மையான நட்பின் நெருக்கத்தை காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும்.
‘கேள்’ என்ற சொல்லை நண்பர், சுற்றம், துணைவர் என்ற பொருளில் வள்ளுவப் பெருமான் மூன்று குறள்களில் பயன்படுத்தியுள்ளார்.
இழுக்கம் = பிழை. கிழமையால் செய்யும் பிழைகளை ஏற்கனவே நாம் குறள் 801ல் பார்த்தோம். மீள்பார்வைக்காக:
கிழமையால் செய்வது என்பது: கேட்காமலே செய்வது; நண்பனுக்கு வரப்போவதை தடுக்கும் விதமாக சிலச்செயல்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவது; தனக்கு வேண்டியதை நண்பனிடம் கேட்காமலே எடுத்துக் கொள்வது; பணிவு மற்றும் அச்சம் இன்றி பழகுவது; இன்னும் பல.
இவற்றை சிலர் பிழைகள் என்று கருதிக்கொண்டு நட்பிற்கு வேட்டு வைக்கும் விதமாக சொல்வதுண்டு, கெழுதகைமை வல்லார்கள், அதாவது நட்பிலே பழுத்த தலைவர்கள் அதைப் புறந்தள்ளுவார்கள். இருப்பினும், குறை சொல்பர்கள் தினமும் முயன்று கொண்டிருப்பார்கள் - அந்நண்பனின் நெருக்கத்தையும் உரிமையையும், தினம் அவர் செய்யும் செயல்களைக் கண்டும் பொறாதவர்கள்.
அது போல குறை சொல்பவர்கள் சொல்லும் குறைகளைக் கேட்காவிட்டால் அந்த நாளுக்கு சிறப்பில்லை என்று எண்ணுவார்களாம். ஏன் நம் நண்பர் உரிமையானச் செயல்களைச் செய்யாமல் இப்படி ஒரு நாளை வீண் செய்தாரே என்றும் எண்ணுவார்களாம்.
‘என்னவோ இன்றைக்கு ஒன்று குறையுதே’ என்பதைப் போல இருக்குமாம்.
என்ன ஒரு கிண்டல் பாருங்க. மீண்டும் ஒரு முறை அந்தக் குறளை வாசியுங்கள் பொருள் விளங்கும் என்று என் ஆசிரியர் சொன்னார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
As My friend Arumugam once said "வள்ளுவபெருமானின் குறள் ஒவ்வொன்றும் ஆராய ஆராய புதுப்புது பொருளை தரும் அறிவு சுரங்கம்". When we go on contemplating on what we heard /read it reveals many hidden meanings