12/02/2023 (710)
ஒற்றர்கள் ஒன்பது வகை என்கிறார் கௌடில்யர் தனது அர்த்த சாஸ்த்திரம் எனும் நூலில்.
1) கபட சீடன்; 2) துறவி; 3) இல்வாழ்வான்; 4) வர்த்தகன்; 5) தவசி; 6) தொழில் பயில்வோன்; 7) கொள்ளிக் கட்டை; 8) நஞ்சிடுவோன்; 9) தவசினி (விவேக போதினி, தொகுதி 11, 1918-1919)
கொள்ளிக்கட்டை – எதற்கும் துணிந்தக் கட்டை; நஞ்சிடுவோன் – அன்பு கொஞ்சமும் இல்லாத குரூர மனம் கொண்டவன்.
இந்த ஒன்பது வகையினரின் விரிவான பண்புகளை விரித்தால் விரியும்.
பரிமேலழகப் பெருமான், ஒற்றர்களுக்கு, ஐயுறாத வடிவான பார்ப்பார், வணிகர் முதலாயினோர் வடிவு என்கிறார். முதலாயினோர் என்றமையின் தீர்த்த யாத்திரை செய்வார், தவஞ்செய்வார், முற்றத் துறந்தார் முதலாயினரையும் கொள்க என்றார் பரிமேலழகப் பெருமானின் உரைக்கு இரு பெரும் பாகங்களாக உரை எழுதிய கோ. வடிவேலு செட்டியார் பெருமான் (1904).
உரைக்கு பலர் உரைகள் எழுதிய பெருமை பரிமேலழகப் பெருமான் எழுதிய உரைக்கு உண்டு.
கர்ணனிடம் உள்ள கவச குண்டலங்களைக் கேட்க இந்திரன் செல்கிறார். அவருக்கு கண்ண பரமாத்மா சொல்லிய வடிவம் அந்தண வடிவம். தானும், அதே வடிவம் கொண்டுதான் இறுதியில் கர்ணனிடம் சென்று செய் புண்ணியங்களைப் பெறுகிறார்.
இது நிற்க.
‘கடுக்கும்’ என்ற சொல்லுக்கு ‘ஒக்கும்’ என்று ஒரு பொருள் இருக்கிறது. ‘கார் மழை முழக்கிசை கடுக்கும்’ என்றால் மழையானது முழவின் இசைக்கு நிகர்க்கும்/ஒக்கும் என்று பொருள். (அகநானூறு)
‘கடா’ என்பது ‘கடுக்கும்’ என்பதன் எதிர்மறை. அதாவது, ஒற்றன் என்று அறிந்து கொள்ள முடியாத உருவத்தோடு இருக்க வேண்டுமாம் ஒற்றன்!
குறிப்பாக, நம்ம வைகைப்புயல் வடிவேலுவின் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் முக்கியமாக ‘கொன்டையை மறைக்கனும்’!
சரி, நீங்க கடுப்பாக வேண்டாம். இது எதற்கு என்பதுதானே கேள்வி? இதோ வருகிறேன்.
“கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாமை வல்லதே ஒற்று.” --- குறள் 585; அதிகாரம் – ஒற்றாடல்
கடா(அ) உருவொடு = யாரும் அறிந்து கொள்ள முடியாத உருவத்தோடு; கண்ணஞ்சாது = எப்போதும் கவனமாக, எதிர்நோக்குபவர்களுக்கு அஞ்சாமல்; யாண்டும் உகாமை = எந்தக் காலத்திலும், எதிராளி சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளிலும் முயற்சித்தாலும், தான் யார் என்று காட்டாமல் இருப்பதே ஒற்றனின் பண்பு; உகாமை = உமிழாமை; கடாஅ - அளபெடை
யாரும் அறிந்து கொள்ள முடியாத உருவத்தோடு, எப்போதும் கவனமாக, எதிர்நோக்குபவர்களுக்கு அஞ்சாமலும், எந்தக் காலத்திலும், எதிராளி சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளிலும் முயற்சித்தாலும், தான் யார் என்று காட்டாமல் இருப்பதே ஒற்றனின் பண்பு.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments