01/05/2023 (788)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
முதல் (661ஆவது)பாடலில் வினைத்திட்பம் என்பது மனத்திட்பம் என்று வரையறுத்தார்.
வினைத்திட்பம் எத்தன்மைத்து என்பதை இரண்டு பாடல்கள் மூலம் தெரிவிக்கிறார். முதலில், ஊறு ஒரால், உற்றபின் ஒல்காமை என்றார். அதாவது, ஊறு தரும் செயல்களத் தவிர்த்து நல்லச் செயல்களைச் செய்தல், அவ்வாறு செய்யுங்கால், ஏதேனும் தவறு நிகழுமானால் தளராமை வேண்டும் என்று தெரிவித்தார். காண்க 30/04/2023 (787). மேலும் தொடர்கிறார்.
செயல்களைச் செய்யும் போது இரகசியம் காப்பது முக்கியம். பல அரசாங்கச் செயல்களும் அவ்வாறே.
இந்தப் பாடல்கள் எல்லாம் அமைச்சருக்குச் சொல்லப்படுபவை என்றாலும் நமக்கும் அவை பொருந்தும் என்ற வகையில் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
எல்லாச் செயல்களும் வெளிப்படையாகத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. அவ்வாறு செய்தலும் கூடாது. சதுரங்க விளையாட்டில் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. ஏன் எந்த விளையாட்டிலும் அவ்வாறே. அரசியலும் வாழ்க்கையும் வேறுபட்டதல்ல.
விளையாட்டிற்கும் வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம் என்றால், விளையாட்டில் நமக்கு எதிர் மோதுபவர்கள் எதிரில் வெளிப்பட நிற்பார்கள். ஆனால், வாழ்க்கையில் நம் பக்கத்திலேயே மறைந்து இருக்கலாம். அதனால்தான் நாம் செய்யும் செயல்கள் அனைவருக்கும் தெரிவித்துவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.
சரி, தெரிவித்துவிட்டுச் செய்தால் என்ன ஆகும்?
எனக்குத் தெரியாதா? அந்தச் செயலில் எள்ளைப் போட எண்னாயிரம் பேர் வேண்டாம். அந்த ஒருவனே போதாதா என்று நீங்கள் சொல்லுவது எனக்குக் கேட்கிறது. அந்த ஒருவன் நமக்குத் தெரிந்தவனாகவே நம் பக்கத்திலேயே இருப்பான் என்பதும் உண்மைதானே?
முக்கியமானச் செயல்களைச் செய்யும் போது, அவைகள் கடைசியில் வெளிப்படுவதுதான் சிறப்பு. அவ்வாறில்லாமல், இடையிலேயே வெளிப்படுமாயின் நீங்காதத் துன்பத்தைத் தரும் என்கிறார் நம் பேராசான்.
“கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.” --- குறள் 663; அதிகாரம் – வினைத்திட்பம்
கடை = இறுதி; கொட்க = வெளிப்படுவது, மீள்வது, சுழலுவது; எற்றா = நீங்காத; விழுமம் = துன்பம்;
கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை = நாம் செய்யும் செயல்கள் அதன் முடிவிலே வெளிப்படுவதுதான் நிருவாகம்; இடைக்கொட்கின்
= இடையிலேயே பகைவருக்கும் வெளிப்பட்டு நிற்குமாயின்; எற்றா விழுமம் தரும் = நீங்காதத் துன்பத்தைத் தரும்.
நாம் செய்யும் செயல்கள் அதன் முடிவிலே வெளிப்படுவதுதான் நிருவாகம். இடையிலேயே பகைவருக்கும் வெளிப்பட்டு நிற்குமாயின் நீங்காதத் துன்பத்தைத் தரும்.
சொல்லிச் செய்ய வேண்டிய வினைகளச் சொல்லிச் செய்ய வேண்டும். சொல்லாமல் செய்ய வேண்டிய வினைகளைச் சொல்லாமல்தான் செய்ய வேண்டும் என்பது தெளிவு.
இதைத்தான், ஆடிக் கறக்க வேண்டிய மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடிக் கறக்க வேண்டிய மாட்டைப் பாடிக் கறக்கணும் என்றார்களோ?
ஆடி = செயல்; பாடி = சொல்லுதல்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments