top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கடும்சொல்லன் ... 566

24/01/2023 (691)

தலைமையானது அச்சப்படும்படி செயல்களைச் செய்து மக்களை மிரட்டினால் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ என்றார். அதாவது வேறு வழியின்றி விரைவில் அழிவார்கள் என்றார் குறள் 563ல்.


குறள் 564 தொடங்கி அழிவு எப்படியெல்லாம் நிகழும் என்பதை எடுத்துச் சொல்கிறார்.


‘இறை கடியன்’ என்று மக்கள் சொல்லச் சொல்ல ‘உறை கடுகி’ அதாவது அவனுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலம் சுருங்கி, சுருங்கி விரைவில் அழிவான் என்றார் குறள் 564ல்.


பெரும் செல்வத்தைப் பேய் காத்தது போல என்றார் குறள் 565ல். அதாவது எளிதில் அனுக முடியாதவனாய், கடு கடுவென்று இருக்கும் தலைமையின் பெரும் செல்வம் எதை ஒக்கும் என்றால் பேய் காத்தப் புதையல் போல யாருக்கும் பயன்படாது என்றார். அதனால் அந்தத் தலைமை கெடும் என்றார்.


அடுத்துவரும் குறளில், நெடும் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார்.


நெடும் செல்வம் என்றால் என்ன? தொன்று தொட்டு தொடரும் செல்வம். அதாவது குடிகள். கொடுங்கோன்மை அதிகாரத்தில் இக்குறிப்பை ஏற்கனவே தந்துள்ளார்.


“கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்” என்று கொடுங்கோன்மையில் சொல்லியிருந்தார். அதாவது, முன் ஈட்டியச் செல்வமும், பின் ஈட்டுவதற்கு துணையாக இருக்கும் குடிகளையும் இழப்பர் என்றார் குறள் 554ல்.


கடும்சொல்லன் கண்இலன் ஆயின் நெடும்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.” --- குறள் 566; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


கடும் சொல்லன் கண் இலன் ஆயின் = தலைமையானது கடும் சொற்களையும், மக்கள் மீது இரக்கம் இல்லாதும் இருப்பின்;

நெடும்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் = தொன்று தொட்டு தொடர்ந்து வரும் செல்வமும் தொடராமல் தலைமையை அழிக்கும்.


தலைமையானது கடும் சொற்களையும், மக்கள் மீது இரக்கம் இல்லாதும் இருப்பின்; தொன்று தொட்டு தொடர்ந்து வரும் செல்வமும் தொடராமல் தலைமையை அழிக்கும்.


பொருளானது எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை எவ்வாறு ஈட்டி பயனுற பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பொருட்பாலின் அடிப்படை நோக்கம். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை!(குறள் 247).


அறத்துப்பாலுக்கு 38 அதிகாரங்களும், இன்பத்துப்பாலுக்கு 25 அதிகாரங்களும் வைத்தவர், பொருட்பாலுக்குத்தான் 70 அதிகாரங்கள் வைத்தார்!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )






Comments


Post: Blog2_Post
bottom of page