25/01/2023 (692)
நேற்று ‘அரும்’ என்றால் என்னவென்று பார்த்தோம். ‘அரும்’ என்றால் ‘காணக்கிடைக்காத’ என்று பொருள். ‘அருங்காட்சி’ என்றால் காணக் கிடைக்காததையெல்லாம் காட்சிப்படுத்துவது.
‘அரம்’ என்று ஒரு சொல் இருக்கிறது. இதைக் குறித்து நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 16/05/2022 (444).
‘அரம்’ என்றால் அது ஒரு கருவி (tool). அதை ஆங்கிலத்தில் ‘File’ என்பார்கள். அதைக் கொண்டு பொன் வேலை, இரும்பு வேலை செய்பவர்கள் (இ)ராவுவார்கள். அந்த அரத்தைக் கொண்டு தேய்த்தால், அது இரும்பாயினும்கூட, தேய்க்கத் தேய்க்க, நுண்ணியத் துகள்களாக ஆக்கிவிடும். அதாவது ஒன்றுமில்லாமல் செய்துவிடும். இது நிற்க.
தலைமையின் வலிமையை தேய்க்கும் அரங்கள் இரண்டு என்கிறார். அது என்னென்ன அரங்கள்?
கடும் சொற்களைப் பேசுவது ஒரு அரமாம்; அளவிற்கு அதிகமானத் தண்டனையைத் தருதல் மற்றொரு அரமாம்.
இந்த இரண்டும், மாற்றாரை வெல்லக்கூடிய தலைமையின் வலிமையாகிய, இரும்பினைத் தூள் தூளாக்கிவிடுமாம்.
“கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரன் தேய்க்கும் அரம்.” --- குறள் 567; அதிகாரம் – வெருவந்த செய்யாமை
அடும் முரன் = (பகைவரை) வெல்லுதற்கு ஏற்ற மாற்று ஏற்பாடு (வலிமை);
கடும் மொழியும் கையிகந்த தண்டமும் = கடிய சொல்லும், (குற்றங்களுக்கு) அளவிற்கு அதிகமானத் தண்டனைகளும்;
வேந்தன் அடும் முரன் தேய்க்கும் அரம் = தலைமையின் வலிமையாகிய இரும்பினைத் தேய்த்து அழிக்கும் அரம்.
கடிய சொல்லும், குற்றங்களுக்கு அளவிற்கு அதிகமானத் தண்டனைகளும்
தலைமையின் வலிமையை தேய்த்து அழிக்கும் அரம்.
இங்கே கடிய சொல்லையும், (குற்றங்களுக்கு) அளவிற்கு அதிகமானத் தண்டனைகளையும் அரம் என்று உருவகம் செய்துவிட்டு வலிமையாகிய ‘இரும்பு’ என்பதை உருவகம் செய்யாமல் விட்டுவிட்டார். ஆகையினால், இதை ஏகதேச உருவக அணி என்கிறார்கள் இலக்கண ஆசிரியர்கள்.
சரி, கடந்த ஐந்துப் பாடல்களைத் தொகுத்தால் வெருவந்து செய்வது என்றால் என்னவென்று புரிந்துவிடும்.
1. காண்பதற்கு அரியன் - மக்கள் தலைமையை நாட முடியாது இருத்தல் (அரும்செவ்வி); 2. கடு கடுவென்று இருத்தல் (இன்னா முகத்தன்); 3. கடுஞ்சொல் பேசுபவன் (கடுஞ்சொல்லன்); 4. இரக்கம் இல்லாதவன் (கண் இலன்); 5. அளவிற்கு அதிகமாக கடுமையாகத் தண்டிப்பவன் (கையிகந்த தண்டம்)
மேற்கண்ட ஐந்தும், தன்னைச் சார்ந்து இருக்கும் மக்கள் அஞ்சத்தக்கன. இவைகளைச் செய்யும் தலைமை வலிமை, செல்வம், இடம் முதலியன இழந்து அழியும் என்கிறார்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதால் நம் அனைவருக்குமே இதுபொருந்தும்.
எனவே, வெருவந்து செய்யாது இருப்போமாக!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments