10/10/2021 (229)
வகுத்துரைக்கும் தூதிற்கு இலக்கணங்கள் சொல்லிக் கொண்டு வருகிறார் நம் பேராசான். இந்த அதிகாரத்தின் மூன்றாவது குறளில் தொடங்கி ஏழாவது குறள் வரை வகுத்துரைப்பாருக்கு என்று எடுத்துக் கொள்ளலாம்.
வகுத்துரைப்பவர்கள், நன்றாக நூல்களைக் கற்க வேண்டும், அதைப் பயன் படுத்தனும், இயல்பான அறிவு, பார்ப்பவர்கள் மதிக்கும் தோற்றம், ஆராய்ந்து அறிந்த கல்வி போன்றவைகள் இருக்கனும். தொகுத்துச் சொல்லும் திறன், தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்த்தல் இருக்கனும். மேலும், ஒன்றையே பிடித்துக் கொண்டு இருக்காமல் எது பயன் தருமோ அதைப் பயன் படுத்தும் திறன் ஆகியன இருக்கனும் என்றெல்லாம் ஏற்கனவே சொல்லி விட்டார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு குறளைச் சொல்லப் போகிறார் இப்போது. பார்க்கலாம் வாங்க.
எல்லாம் இருந்தாலும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் சொல்லனுமாம். இதுதான் தலையானது என்கிறார். அப்போதுதான் சொல்ல வந்த கடமை இனிதே நிறைவேறும் என்கிறார் நம் பேராசான். Right time in the right place என்கிறார்களே அதுதான் இது. இதைத்தான் இயக்கத்தோடு இணைவது என்று சொல்கிறார்கள். அப்போது நம்ம வேலை ரொம்பவே சுலபமாயிடும்.
நீங்க எந்த வெற்றியாளர்களையும், உங்க வெற்றிக்கு காரணம் என்னன்னு கேட்டீங்க என்றால், பெரும்பாலும் அவர்கள் சொல்வது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தேன் என்பதுதான். நமக்கு புரிஞ்சா மாதிரி இருக்கும். ஆனால், உண்மையிலே புரிவதில்லை. அதை அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? இங்கேதான் ரகசியம் ஒளிஞ்சிருக்கு.
அந்த ரகசியத்தையும் வள்ளுவப் பெருமான் இந்தக் குறளில் சும்மா போகிறப் போக்கில் சொல்லப் போகிறார். அதை மட்டும் பிடிச்சுட்டாப் போதும். தூதுக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்குமே அதுவே துணை.
குறளைச் சொல்லுங்க முதலில் என்கிறீர்களா? இதோ:
“கடன் அறிந்து காலங்கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை.” --- குறள் 687; அதிகாரம் - தூது
கடன் அறிந்து = கடமையை அறிந்து; காலங்கருதி = சரியான நேரத்தில்; இடன் அறிந்து = இடம் அறிந்து; எண்ணி = ஆய்ந்து; உரைப்பான் = சொல்லுபவனுக்கு; தலை = முதன்மையானது, முக்கியமானது.
ஆரம்பமே பாருங்க, ‘கடன் அறிந்து’. இதுதான் அந்த ரகசியம். நமக்கு என்ன தேவையென்று தெரியனும். இதுதான் முக்கியம். அது தெரியாம சும்மா எல்லாத்துக்கும் பின்னாடி ஓடிக்கொண்டு இருக்கக் கூடாது. தேவை எது என்று எப்படி கண்டுபிடிப்பதுன்னு கேட்கறீங்களா? அதற்கும் வழிகள் இருக்காம். அதைப் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார் ஆசிரியர். பொறுமை காக்கவும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments