29/01/2023 (696)
வெருவந்த செய்யாமையைத் தொடர்ந்து கண்ணோட்டம் (58ஆவது) எனும் அதிகாரம் வைத்துள்ளார்.
வெருவந்த செய்தலில், ‘கண் இலன்’ ஒன்று. கண் இலன் என்றால் இரக்கம் இல்லாதவன் என்று பொருள். மக்களின் துன்பத்தைக் கண்டபின்பும் இரங்கவில்லை என்றால், அவன் எப்படி ஒரு தலைவனாக இருக்க முடியும் என்று கேட்டார். அதனால், தலைமைக்கு கண்ணோட்டம், அதாவது இரக்கம், முக்கியம். அதனால், அதனை விரிக்க எண்ணி, அடுத்த அதிகாரமாக கண்ணோட்டம் வைக்கிறார்.
இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, அதன் பதிலையே முதல் குறளாக வைக்கிறார் கண்ணோட்டத்தில்.
ஆசிரியர்: தம்பி அந்தக் குறளைப் படிங்க.
நம்மாளு: என்னங்க ஐயா, ‘பேரழகானப் பெண்கள்’ இருப்பதால் இந்த உலகம் இருக்குன்னு சொல்கிறார் நம் பேராசான்.
ஆசிரியர்: பொறு தம்பி. கண்ணோட்டத்திற்கு ‘கழிபெரும் காரிகை’ என்ற உவமையைப் பயன்படுத்துவதைத் தானே சொல்கிறீர்கள். அவர் சொல்வது ‘பெரும் பேர் அழகு’ என்ற பொருளில்!
காரிகை என்றால் ‘பெண்’ என்றும் பொருள். ‘அழகு’ என்றும் பொருள்.
நம்மாளு: ‘பெண்’ என்றாலே ‘அழகு’ தானே சார்! ... இரக்கத்திலும் நளினம் இருக்கனும் போல!
ஆசிரியர்: ஆமாம் தம்பி. இரக்கம் காட்டுவதிலும் நளினம் இருக்கனும். ஆழ்ந்து யோசிக்க வேண்டியது இது. சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் உலகு.” --- குறள் 571; அதிகாரம் – கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை = இரக்கம் என்னும் பெரும் பேரழகு; உண்மையான் உண்டுஇவ் உலகு = உண்மையில் தலைவர்களிடம் இருப்பதால்தான் இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
இரக்கம் என்னும் பெரும் பேரழகு, உண்மையில் தலைவர்களிடம் இருப்பதால்தான், இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
கழி என்பது ஒரு உரிச்சொல். கழி என்பது மிகுதியைக் குறிக்கும். கழிபெரும் என்றால் மிகுதியான மிகுதி என்று மிகைப் படுத்துகிறார்.
இலக்கணம் – எச்சரிக்கை:
சொற்கள் பொதுவாக நான்கு வகைப்படும். அவையாவன: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.
உரிச்சொல் என்பது ஒன்றுக்கு உரிமையுடையதானச் சொல். உரிச்சொல் இரண்டு வகைப்படும். அவையாவன: ஒருபொருள் குறித்த பலசொல்; பலபொருள்குறித்த ஒருசொல்.
தமிழில் “மிகுதி” என்பதைக் குறிக்கும் உரிச்சொற்கள்: சால, உறு, தவ, நனி, கூர், கழி எனும் ஆறு சொற்கள் (synonyms).
மிகுதி என்றால் ‘ரொம்ப’ ன்னு சொல்லலாமேன்னு கேட்டால், உரைநடையில் நிச்சயமாகச் சொல்லலாம். ஆனால், செய்யுளில் ‘அசைகள்’, ‘சீர்கள்’ ன்னு இருக்கு. அதற்கு சொற்கள் நிறையத் தேவைப்படும். அதற்காகத்தான் அந்தக் காலத்தில் பல சொற்களை உருவாக்கினார்கள். அசைகளும், சீர்களும் ஒசை நயத்திற்கு முக்கியம். செய்யுள் என்றாலே செய்தல் என்று பொருள். பாடல்களைச் செய்யும் போதே, படிப்பவர்கள் உச்சரிக்கும் முறையிலேயே சொல்ல வந்த உணர்வுகளைப் பெறவேண்டும் என்று செய்வார்கள்.
பல உதாரணங்களைத் தரலாம். பிறகு பார்ப்போம் என்று சொல்லிவிட்டார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Bình luận