05/02/2023 (703)
விதையானது மண்ணை வெடித்துக்கொண்டு வெளிவரும்; மண்ணைத் துளைத்துக் கொண்டு வேர் விடும்; அது மரமாக வளர, வளர ஆழமாகவும் அகலமாகவும் தனக்குத் தேவையான அளவிற்கு மண்ணின் உள்ளே பரவிடும்! அப்போதுதான், அந்த மண்ணும் அந்த மரம் ஓங்கி உயர துணை நிற்கும்,
விதையானது மண்ணிற்கு நோகும் என்று முளைக்காமலே இருந்தால், ஆழமாக வேர் விடாமலே இருந்தால்? ஒரு மண்ணும் அதை மதிக்காது, உதவாது!
மண்ணோடு மரம் இயைந்து சென்றால், அதாவது இணைந்து சென்றால் மண்ணிற்கும் பயன், மரத்திற்கும் பயன்.
நாம் பார்த்த “மண்ணோடு இயைந்த ...”குறளை மீண்டும் ஒரு முறை வாசிப்போம்:
“மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர்.” --- குறள் 576; அதிகாரம் – கண்ணோட்டம்
நம் பேராசான் இரண்டு சொற்களைப் பயன்படுத்துகிறார். “இயைந்த” என்றும் “இயைந்து” என்றும் சொல்கிறார்.
‘இயைந்த’ என்றால் ‘விட்டுக் கொடுத்த’ என்று பொருளாகிறது; ‘இயைந்து’ என்றால் ‘இணைந்து’ என்று பொருளாகிறது.
‘மண்ணொடு இயைந்த மரத்தனையர்’ என்றால் மரமானது போராடி தனக்கென்று ஒரு இடத்தைப் பிடிக்காமல், மண்ணிற்கு அது விட்டுக்கொடுத்தால் பலனில்லை. அதுபோல, கண்ணொடு இரக்கமானது இணைந்து செயல்படவில்லை என்றால் அதற்கும் பலனில்லை.
இது நிற்க. ஆக மொத்தம், நம் பேராசான் சொல்லவருவது கண்களில் இரக்கத்தை வையுங்கள் என்பதுதான். சொல் ஆராய்ச்சிகள் மகிழ்வைத்தரலாம்! செயல்தான் பலன் தரும்!
மனிதன் வளர, வளர அறிவு வளர்கிறது. ஆனால், இதயம் சுருங்கி விடுகிறது. எப்படிச் சொல்கிறாய் என்று கேட்பீர்கள்.
குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை அழ இன்னொரு குழந்தை தாங்காது. அதுவும் அழும். தன்னிடம் உள்ள எந்த ஒரு பொருளையும், பொம்மையையும் கொடுத்து அழுகின்ற மற்றொரு குழந்தையைச் சமாதானம் செய்ய முயலும். அதாவது இதயம் விரிந்திருக்கும் குழந்தைகளுக்கு!
இதே குழந்தை வளர்ந்து, கொஞ்சம் புத்தியும் வளர்ந்துவிட்டால், பெரியவனாகிவிட்டால்? "அவன் அழுதா எனக்கென்ன, அது அவனோட பிரச்சனை" என்பான். அவனுக்கு அறிவு வளர்ந்துவிடுகிறது, இதயம் சுருங்கிவிடுகிறது.
இதைத்தான், அருணகிரிநாதப் பெருமான் ‘கரவாகிய கல்வி’ என்று சொல்கிறார். இதை, நாம் முன்பு ஒருமுறை சிந்தித்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 06/02/2022 (346).
கற்க, கற்க கரவு மனதுக்குள் புகுந்து கொள்ளுமாம். கரவு என்றால் ஒளித்து வைத்தல், மறைத்து வைத்தல் என்று பொருள்.
“கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? …” பாடல் 45, கந்தர் அநுபூதி
யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன் நின்று என்னை இரக்க வைப்பாயோ? என்று அருணகிரிநாதப் பெருமான் கேட்கிறார்.
அதனால்தான் நம் பேராசான், திருப்பித் திருப்பிச் சொல்கிறார். இரக்கம் இல்லாத கண்கள், கண்களில்லை; கண்ணென்று இருந்தால் அதில் இரக்கம் இல்லாமலும் இல்லை என்கிறார்.
இதை, ஆங்கிலத்தில் circular reference என்பார்கள். “கத்தினால் குத்துவேன்; குத்தினால் கத்துவேன்” என்பதுபோல!
நம் பேராசான் அடுத்தக் குறளில் அதைப் பயன்படுத்துகிறார்.
“கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.” --- குறள் 577; அதிகாரம் – கண்ணோட்டம்
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் = இரக்கம் இல்லாத கண்கள், கண்களில்லை. அதாவது, இரக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் இல்லை; கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் = கண்ணென்று இருந்தால் அதில் இரக்கம் இல்லாமலும் இல்லை. அதாவது கண் ஒருவருக்கு இருந்தால் அதில் இரக்கம் இல்லாமலும் இருக்காது.
ஏன் இதைச் சொல்கிறார் என்றால், தம்பி இரக்கம் என்பது இயல்பு. அதை நீ தப்பான அறிவைக் கொண்டு மறைத்துக் கொள்கிறாய் ராஜா. அந்த இரக்கத்தை வெளியே கொண்டு வா. உண்மையான கண்கள் உள்ளவனாக மாறு தம்பி என்கிறார்.
அறிவைப் புறம் தள்ளு; அன்பைப் பெருக்கு!
முயலுவோமாக!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments