03/02/2023 (701)
அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் நம் பேராசான். காண்க 22/03/2021 மீள்பார்வைக்காக:
“அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்.” --- குறள் 421; அதிகாரம் – அறிவுடைமை
அற்றம் = அழிவு; செறுவார்க்கும் = பகைவர்கட்கும்; உள்ளழிக்கல் ஆகா= உள்ளே புகுந்து குழப்பம் பண்ணி காலி பண்ண முடியாத; அரண் = பாதுகாப்பு வளையம்.
அறிவு கருவியாகவும் (tool) அதே சமயத்திலே கேடயமாகவும் (shield) பயன் படக்கூடியது.
அறிவைப் பெற வேண்டுமானால என்ன செய்யனும்? கற்க வேண்டும்.
கற்பதன் பயன் அறிவு. அறிவின் பயன் அருள். அதாங்க, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வர வேண்டும். இரக்கம் இருக்கனும், கருணையிருக்கனும். இதுதான் கற்பதன் பயனாக இருக்கனும்.
மற்றவற்களைப் பல வகையில் சுரண்டுவது எப்படின்னு படிப்பது படிப்பல்ல!
கண் இருக்கே கண் அது ஒரு குறியீடு. உணர்வதை உணர்த்தும் புலன்கள் எல்லாம் கண்கள்தான். கண் முகத்தில் இருக்கு, அது முகத்திற்கு ஒரு அழகு. கற்பனைப் பண்ணிபாருங்க, கண் மட்டும் அது இருக்கும் இடத்தில் இல்லையென்றால் முகம் அழகாகவாயிருக்கும்?
அதுபோல, ஒருவன் இருப்பதன் அடையாளம் என்னவென்றால் அவன் கற்றிருக்க வேண்டும். அந்தக் கற்றல் அவனையும், சமூகத்தையும் உயர்த்தவேண்டும். அப்படியில்லாமல் இருந்தால்?
நம்ம பேராசான் சொல்வதைக் கேட்போம்:
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்.” --- குறள் 393; அதிகாரம் – கல்வி
கண் உடையர் என்பவர் கற்றோர் = அவருக்கு ‘கண் இருக்கு’ என்று உயர்த்திச் சொல்லக்கூடியவர் கற்றவர்;
கல்லாதவர் முகத்து இரண்டு புண்ணுடையர் = (அப்படியில்லாமல் ஒருவர் இருந்தால், அதாவது) கல்லாதவராக இருந்தால் முகத்தில் அவர்களுக்கு இருப்பது கண் அல்ல இரண்டு புண்கள்தான் அவை.
சரி, நம்மாளு கற்றுவிட்டார். இப்பவாவது, நம்ம பேராசான் அது கண்கள்தான் என்று ஒத்துக்கொள்வாரா என்றால் அது எப்படி? நம்ம பேராசான் கெட்டி இல்லயா?
சரி, தம்பி நீ கற்றுவிட்டாய் அதனால் உனக்கு கண்கள் இருக்குன்னு சொன்னாலும் அது இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கனும் இல்லையா?
ஒரு cooling glass (குளிரூட்டும் கண்ணாடி) போட்டால் எப்படி இருக்கும்? குளிர்ச்சியாகவும் இருக்கும், இன்னும் கொஞ்சம் அழகாகவும் இருக்கும் இல்லையா?
நம்மாளு: ஐயா, இப்ப என்ன, ஒரு cooling glass போடனும் அவ்வளவுதானே? போட்டால் போச்சு. இது என்ன பிரமாதம்?
பொறு தம்பி. நம்ம பேராசான் சொல்கிற cooling glass எதுன்னு கேட்டால் அதுதான் இரக்கம் என்னும் குளிரூட்டும் கண்ணாடி. அதைத்தான் எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். அதுதான், கண்ணை கண்ணுன்னு சொல்ல வைக்கும். இல்லையென்றால் அது மறுபடியும் புண்தான்!
“கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப் படும்.” --- குறள் 575; அதிகாரம் – கண்ணோட்டம்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் = கண்ணிற்கு அழகு சேர்க்கும் அணிகலம் எது என்றால் அதுதான் கண்ணோட்டம் எனும் இரக்கம்;
அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் = அந்தக் கண்களில் இரக்கம் இல்லையென்றால் அது புண் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறுதான் அது அறியப்படும்.
நம்ம பேராசான் பாருங்க எப்படி, பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் நம்மை மெல்ல, மெல்ல கையைப் பிடித்து உயர்த்திவிடுகிறார்!
நம்ம மகாகவி பாரதி சொல்வதையும் கேட்போம்.
“ ... உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.” --- “யாமறிந்த மொழிகளிலே ...” என்ற பாடல்; மகாகவி பாரதி
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments