05/03/2022 (372)
புணர்ச்சிவிதும்பல் அதிகாரத்தின் கடைசி குறளுக்கு வந்துவிட்டோம்.
தோழியிடம் “மலரினும் மெல்லிது காமம் …” என்பதை விளக்கிய ‘அவன்’, இம்முறை அவளின் ஊடல் சற்று நீட்சியாக இருப்பது போல தோன்றுகிறது
அவன்: முன்னொரு சமயம் (last time), நான் அவளைக் காணவந்த போது, கண்ணிலே கோபத்தைக் காட்டினாள், ஆனால், உடனே என்னைத்தழுவினாள்.
“கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப்புற்று.” --- குறள் 1290; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
துனித்து = பகைத்து; என்னினும் = என்னைவிட; புல்லுதல் = தழுவுதல்; கண்ணின் துனித்தே = கண்ணினால் ஊடி; கலங்கினாள் = என் நிலையைக் கண்டு கலங்கினாள்; என்னினும் தான் விதுப்பு உற்று புல்லுதல் = (ஆதலினால்) என்னைவிட ஆர்வமாய் அவளே தழுவினாள்
அவன்: அவளா இவள்?
தோழி: ஆமாம், நீங்க அடிக்கடி இப்படி செய்தால் என்ன செய்வதாம்? அவள் என்னிடம்கூட இப்போது பேசுவதில்லை.
அவன்: அப்போ யாரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள்?
தோழி: பேசுவது மட்டுமல்ல, அவள் அன்போடு தழுவிக்கொள்வதும் …
அவன்: தழுவிக்கொள்வதுமா? என்ன சொல்கிறாய் நீ? அவளா?
(backgroundல் (பின்புலத்தில்) இந்தப் பாட்டு ஒலிக்கிறது)
“உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைப் பார்க்கலாம்
சுட்ட உடல்கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்
நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை, அவளா சொன்னாள் …” --- கவிஞர் வாலி
தோழி: ஆமாம்.
என்ன செய்தி என்று நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments