15/11/2023 (984)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
மறைந்திருந்து தாக்குவதைவிட நேருக்கு நேர் மோதுவதை வீரர்கள் விரும்புவார்கள். அறிவுடையோர், தங்கள் கருத்துகளை நேருக்கு நேர் மோதிப்பார்த்துப் பட்டைத் தீட்டிக் கொள்ளவேண்டும் என்று நினைப்பர்.
நேருக்கு நேர் என்றால் தெளிவு. மறைந்து நின்று புறம் பேசுதல் இழிவு.
கண்ணோட்டம் என்றால் இரக்கம் என்று பார்த்துள்ளோம். காண்க 29/01/2023 (696). கண்னோட்டத்திற்கு ஒரு தனி அதிகாரம் வைத்து விளக்கியதை நாம் சுவைத்துள்ளோம். அந்த அதிகாரத்தின் முதல் குறள் மீள்பார்வைக்காக:
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் உலகு. - 571; கண்ணோட்டம்
இரக்கம் என்னும் பெரும் பேரழகு, உண்மையில் தலைவர்களிடம் இருப்பதால்தான், இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்கிறார்.
சரி, இந்தக் கண்னோட்டம் எதற்குப் புறங்கூறாமையில் என்றால் அஃதாவது ஒருவரை நேருக்கு நேராக அவரின் கண்ணெதிரிலேயே, இரக்கம் ஒரு துளியுமின்றி, கடுமையான வசவுகளைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது அவரைக் குறித்து இழிவாகவும் தாழ்வாகவும், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளைச் சற்றும் சிந்திக்காமல் சொல்வது கூடாது என்கிறார்.
“கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.” --- குறள் 184; அதிகாரம் – புறங்கூறாமை
கண்நின்று = ஒருவனின் எதிரே நின்று; கண்ணற = இரக்கம் சிறிதுமின்றி; சொல்லினும் = சொன்னாலும் (பரவாயில்லை). முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க = (ஆனால்) அவர் நமக்கு முன் இல்லையாயின், அஃதாவது அவர்க்கு மறைவாக, அவரைக் குறித்து, எந்தவொரு பின் விளைவுகளையும் சிந்தியாமல், அவதூறுகளைச் சொல்வதைத் தவிர்க்க.
ஒருவனின் எதிரே நின்று அவரைக் குறித்து இரக்கம் சிறிதுமின்றி சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், அவர் நமக்கு முன் இல்லையாயின், அஃதாவது அவர்க்கு மறைவாக, அவரைக் குறித்து, எந்தவொரு பின் விளைவுகளையும் சிந்தியாமல், அவதூறுகளைச் சொல்வதைத் தவிர்க்க.
பாராளுமன்றத்திலோ சட்டப் பேரவையிலோ அந்த மன்றத்தில் இல்லாதவரைப் பற்றியக் குற்றச்சாட்டுகளை மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கக் கூடாது என்று ஒரு மரபே இருக்கிறது. இது அனைவருக்குமே பொருந்தும்.
ஒருவன் அற வழியில் நடக்கிறானா இல்லையா என்பதற்கு ஒரு தேர்வாக இதை வைக்கலாம் என்கிறார்.
எதை? அதாங்க, புறம் பேசாமையை!
ஒருவனின் மனம் அறக் கருத்துகளைவிட்டு விலகி இருக்கிறதா இல்லையா என்பதை அவன் புறம் பேசும் கீழ்த்தரம் காண்பித்துக் கொடுத்துவிடும்.
அறத்தைப் பற்றி ஆறு வாரம் தொடர்ந்து பேசுவார். அடடா, என்ன அருமையான அறக்கருத்துகளைச் சொல்கிறார் என்று நினைக்கும் போதே, மற்றவர்களைக் குறித்து அவதூறும் பரப்புவார். இதைக்கொண்டு அவர் அறத்தினின்று விலகியிருப்பதைக் கண்டு கொள்ளலாம் என்கிறார்.
படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்.
படிப்பதோ கட்டபொம்மன் நூல்; பிடிப்பதோ எட்டப்பனுக்கு வால்.
அஃதாவது, சொல் ஒன்று; செயல் ஒன்று.
“அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப் படும்.” --- குறள் 185; அதிகாரம் – புறங்கூறாமை
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை = அறக்கருத்துகளை அள்ளித் தெளிப்பவரின் மனத்தில் அவர் சொல்லும் அறக்கூறுகள் இல்லாமல் இருப்பதை; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் = (எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால்) அவர் பேசும் அவதூறுகளால் கண்டுகொள்ளலாம்.
அறக்கருத்துகளை அள்ளித் தெளிப்பவரின் மனத்தில் அவர் சொல்லும் அறக்கூறுகள் இல்லாமல் இருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால் அவர் பேசும் அவதூறுகளால் கண்டுகொள்ளலாம்.
அன்மை = அல்லாமை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários