29/09/2022 (578)
காதல் சிறப்பு உரைத்தல் அதிகாரத்தில் முதல் ஐந்து குறள்கள் அவன் சொன்னது. அடுத்துவரும் ஐந்தும் அவள் சொல்வது.
அவள்: சும்மா, சும்மா அவர் எங்கே, எங்கே என்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவர் என்னுடனே இருக்கிறார். அவரை காண்கிறேன். அவரால் காண்கிறேன்.
தோழி: அப்படியா? அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல வேண்டியதுதானே? நாங்களும்தான் பார்ப்போமே!
அவள்: (முறைத்துக் கொண்டே) நீ ஏனடி பார்க்கனும்? அவர் என் கண்களில் இருந்து விலகுவதுமில்லை, நீங்குவதுமில்லை.
தோழி: ஆங்… பெரிய ஆளுதான் அவர்…
அவள்: அவர் ஒன்றும் பெரிய்ய்ய ஆள் இல்லை. மிகவும் நுண்ணியர். அதாவது நுட்பமானவர்.
தோழி: சரிடிம்மா. எங்களுக்கு காட்ட வேண்டாம். நாங்களும் பார்க்க மாட்டோம். எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று மட்டும் சொல்லு.
அவள்: என் கண்களுக்குள்!
தோழி: அவர் வருந்துவார் என்றுதான் கண்களை இமைக்காமல் இருக்கிறாயா?
அவள்: அப்படியெல்லாம் இல்லை. நான் மறந்து இமைத்தாலும் அவர் ஒன்றும் வருந்தமாட்டார். என் காதலர் மிகவும் நுட்பமானவர்.
“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காத லவர்.” --- குறள் 1126; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
அவர் எப்போதும் என் கண்ணை விட்டு நீங்கமாட்டார்; மறந்து இமைத்துவிட்டாலும் அதனால் அவர் வருத்தமடையவும் மாட்டார்; என் காதலர் மிகவும் நுட்பமானவர்.
பருவரல் = வருந்துதல்; கண்ணுள்ளின் போகார் = (என்) கண்ணை விட்டு நீங்க மாட்டார்; இமைப்பின் பருவரார் = (மறந்து) இமைத்துவிட்டாலும் அதனால் அவர் வருத்தமடைய மாட்டார்; எம் காதலவர் நுண்ணியர் = என் காதலர் மிகவும் நுட்பமானவர்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Kommentare