top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கண்நின்று கண்ணறச் ... 184

31/01/2023 (698)

‘கண்’ என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன.

கண் என்றால் ஒரு உறுப்பு;கண் என்றால் இரக்கம் (பண்பு); கண் என்றால் இடத்தையும் சுட்டும் ... இப்படி பலவாறாகப் பொருள் படுகிறது.


“எதுவாக இருந்தாலும் முகத்துக்கு எதிரே நின்று சொல்; பின்னால் சென்று புறம் கூறாதே; அப்புறம், அவன் முகத்தை உன்னாலே பார்க்க முடியாது” என்பார்கள்.


நம் பேராசான் அதனை அப்படியே ஒரு குறளில் வைத்துள்ளார்.


கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன் இன்று பின் நோக்காச் சொல்.” --- குறள் 184; அதிகாரம் – புறங்கூறாமை


கண் நின்று = எதிரே நின்று; கண்ணற = இரக்கம் இல்லாமல்;

கண் நின்று கண்ணறச் சொல்லினும்= முகத்துக்கு எதிரே நின்று பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு கடுமையானக் கருத்துகளையும் சொல்லலாம்;


முன் இன்று சொல்லற்க = நேருக்கு நேர் நின்று சொல்லாமல் பின்னாடி போய் புறம் பேசாதீங்க; பின் நோக்காச் சொல் சொல்லற்க = (அதுவும்) பின் விளைவுகளை எண்ணாதச் சொல்லைச் சொல்லாதீங்க.


பின் விளைவுகள் என்றால் என்ன? நாம் பேசியதில் உண்மை இல்லாமல் இருக்கலாம்! நாம் மறைவாகப் பேசியதால், அவரின் முகத்தைப் பிறகு பார்க்க முடியாமல் போகும். நட்பு முறியும்.


பின்னாடிப் போய் ஒருவரைப் புகழலாம். அது விரும்பத்தக்கதும்கூட. ஆனால் இகழ்வது என்பது தவிர்க்கப்பட வேண்டியது. அதனால்தான் ‘பின் நோக்காச் சொல்’ தவிருங்கள் என்றார்.


இந்தக் குறளில் ‘கண்’ என்பது குறளின் முதல் சொல்லாக வந்து ‘எதிரே’ என்ற இடத்தைச் சுட்டுகிறது.


இரண்டாவதாக வரும் ’கண் அற’ என்பது இரக்கம் இன்றி என்ற பண்பைக் குறிக்கிறது. இப்படிச் சொற்களை வைத்து சித்து செய்வார் நம் பேராசான்.


அது மட்டுமல்லாமல், ‘சொல்லினும் - சொல்லற்க – சொல்’ என்று ஒரு சொல்லை வைத்தே விளையாடுவார்.


முன்Xபின்; நின்றுXஇன்று – இப்படி முரண்களையும் அடுக்குவார். இது எல்லாவற்றையும், ஒரே குறளில் வைத்தும் அசத்துவார் நம் பேராசான். இப்படி விளையாடும் போது கருத்தையும் சொல்லாமல் விடமாட்டார்!


சரி, கண்ணோட்டம் தானே பார்த்துக் கொண்டுள்ளோம். நடுவிலே, ஏன் இந்தக் குறள் என்கிறீர்களா? கண்ணோட்தில் அடுத்தக் குறள் இது போலவே அமைந்து இருக்கிறதாம் . நாளை பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






Comentários


Post: Blog2_Post
bottom of page