16/02/2022 (355)
குறிப்பு அறிவுறுத்தல் என்பது என்னவென்று கேட்டால் தலைமகன், தலைமகள், தோழி இவர்களுக்குள் ஒருவர் குறிப்பினை ஒருவருக்கு அறிவுறுத்துதலாம். சில சமயம் நேராகச் சொல்ல முடியாத போழ்து தலைமகளின் தோழியிடம் சொல்வார்களாம்.
அவன் தோழியிடம் சொல்வது: அவள் பிரிவினால் மிகவும் வாடிக் கொண்டு இருந்ததை அவள் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறாள். இருப்பினும், அது தேவையா? நான் வருவேன் என்று அவளுக்குத் தெரியாதா? ஏன், இப்படி வருத்திக் கொள்ளும் பேதையாக, அதாவது ரொம்ப சின்னக் குழந்தைப் போல இருக்கிறாள்? (பேதைப் பருவம்: 9-10 வயது). எனக்கு மட்டும் தெரியாத என்ன? நான் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று ஏங்கிக் கொண்டுள்ளேன்.
என் கண் நிறைந்த பேரழகி அவள், வலிமையும், வனப்பும் ஒருங்கு சேர இருக்கும் மூங்கிலைப் போன்ற தோள்கள் …
தோழி: ஆங், அப்புறம் ..
அவன்: மீதியெல்லாம் அவள்கிட்டயே சொல்லிக் கொள்கிறேன். என்ன ஒன்று, பெண்களுக்கே உண்டான குணம் அவளிடம் ரொம்பவே இருக்கு.
“கண் நிறைந்த காரிகைக்கு காம்புஏர்தோள் பேதைக்குப்
பெண் நிறைந்த நீர்மை பெரிது.” --- குறள் -1272; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்.
கண் நிறைந்த காரிகைக்கு = என் கண் நிறைந்த அழகிக்கு; காம்பு ஏர் தோள் = மூங்கிலைப் போன்று வலிமையும் வனப்பும் கொண்ட தோள்களைப் பெற்றவள், தைரியமானவள்; பேதைக்குப் பெண் நிறைந்த நீர்மை பெரிது = வழக்கமாக எல்லாப் பெண்களுக்கும் சின்ன குழந்தைகள் போல கலங்கும் தன்மை இருக்கும். இவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு; நீர்மை = தன்மை
தோழி: இது எல்லாம் போதாது ராசா. இன்னும், இன்னும். இன்னும் கற்பனையைத் தட்டி விடனும். அப்போதுதான் நான் போய் சொல்ல முடியும் என்பது போலப் பார்கிறாள்.
அவன் தொடர்கிறான். நாமும் தொடருவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Σχόλια