01/10/2021 (220)
நேற்று அவன் பார்க்கும்போதே, அவனின் நிலைமையைக் கண்டு சிரித்தவர்களுக்கு தான் படும் பாடு தெரியலை அதான் சிரிக்கிறார்கள் என்று அவன் புலம்புவது மாதிரி பொருள் கொண்ட குறளைப் பார்த்தோம்.
இன்று, அவள் என்ன செய்கிறாள் என்பதைக் குறித்து நம் பேராசான் சொல்வதைப் பார்க்கலாம்.
அவள் சிரித்துக் கொண்டு இருக்கிறாளாம்!
என்ன? அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாளா? என்ன ஒரு நெஞ்சழுத்தம்?
இந்தப் பெண்களே இப்படித்தான் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு இருக்காதீங்க! கொஞ்சம் பொறுங்க.
அவள்பாடும் ரொம்ப மோசமாகத்தான் இருக்காம். அவள் கண்கள் செய்யும் சேட்டைகள், சிரிப்பாய் சிரிக்கிற மாதிரி இருக்காம். இதுவும் ஒரு விதமான சிரிப்பு.
கண் விதுப்பு அழிதல் என்ற அதிகாரத்தில் (118) இருக்கும் அத்தனைக் குறளும் கண்களிலே ஓத்திக்கலாம்ன்னு சொல்வாங்களே அது போல இருக்கு. என்ன ஒரு கற்பனை நம்ம பேராசானுக்கு.
கண் வேக, வேகமா அவன் வருவானா என்று பார்த்து, பார்த்து அழியுதாம். அது தான் கண் விதுப்பு அழிதல். விதுப்பு என்றால் விரைதல் என்று பொருள்.
“எப்போ வருவாரோ எந்தன் கலி தீர … “ என்ற பெருங்கவி கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இது நிற்க.
குறளுக்கு வருவோம்.
அன்றைக்கு, ஆவலாக அவர் வருவதை விரைந்து நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று பிரிவின் காரணமாக, இப்போதும், விரைந்துதான் நோக்குகிறது ஆனால் என்ன அழுது கொண்டே இருக்கிறது. இதைப் பார்த்தால் சிரிப்புதான் வருது – என்பதைக் குறளாக வடிக்கிறார் நம் பேராசான்
“கதுநகத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத் தக்க துடைத்து.” --- குறள் 1173; அதிகாரம் – கண்விதுப்பு அழிதல்
கதுநகத் தாம் நோக்கி = (அன்றைக்கு சிரித்துக் கொண்டே எங்கே அவர் என்று) விரைந்து நோக்கிய கண்களே; தாமே கலுழும் = (பிரிவின் காரணத்தால்) இன்றைக்குத் தானே அழுகிறது; கலுழும் = கலங்கும்; கலுழி = கலங்கல் நீர், கண்ணீர்; இது நகத் தக்க துடைத்து = இந்த கண்ணைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது
எப்படியாக இருந்தாலும், சிரிச்சுகிட்டே இருங்க. மகிழ்ச்சியாக வைச்சுக்கோங்க மனசை. எல்லாம் சரியாகிடும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் --- உங்கள் அன்பு மதிவாணன்.
Comments