11/10/2023 (949)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
தொண்டை மண்டலத் திருமுனைப்பாடியில் தோன்றிய சமண மதத்தைச் சார்ந்த முனைப்பாடியார் என்று வழங்கப்படுகின்ற பெரும் புலவர் அறநெறிச்சாரம் என்ற நூலை கி.பி. 13ஆம் நூற்றாண்டில் இயற்றியுள்ளார். நமக்குக் கிடைத்துள்ளப் பாடல்கள் 226 வெண்பாக்கள்.
அதில் ஒரு பாடல்: “பொறுமையே சிறந்த தவமாகும்”
“எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும்-மெள்ள
அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதொன்று வேண்டா தவம்.” --- பாடல் 81, அறநெறிச்சாரம்
தன்னை ஒருவர் தீச்சொல்லால் சுட்டால் அது தன் நெஞ்சில் கொள்ளி வைத்தாற்போன்று கொடிதுதான் என்றாலும் மெள்ள அறிவென்னும் நீரால் அதனை அழிப்பதே சிறந்த நெறியாகும்.
அறிவென்னும் நீர் கொண்டு அந்த நெஞ்சத்தின் கனலை அணைத்து விட வேண்டும். வடுவாக மாறவிடக் கூடாது. இதைக் கவனத்தில் வைப்போம்.
கதம் என்ற சொல்லுக்கு சினம், பாம்பு, வலி, அடைந்திருத்தல் இப்படிப் பல பொருள்கள் இருப்பதாகத் தமிழ் அகராதி சொல்கிறது.
கது+அம் = கதம். கது என்றால் வடு, பிளவு.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. இது சேர மன்னர்கள் பதின்மரைக் குறித்துப் பத்து பெரும் புலவர்கள் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடியது. இந்த நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஐந்தாம் பத்தில் பாடப்பெற்றிருக்கும் மன்னனின் பெயர் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்.
அவனைப் பாடும்போது: அவன் அணிந்திருந்த அம்புகளை ஏந்தும் தூணி தும்பைப் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்ததாம். அந்தத் தூணியில் புற்றில் இருக்கும் பாம்புகளைப் போல அம்புகள் பதுங்கி இருந்ததாம். அவனிடம் வளைந்த வில் இருந்ததாம். ஆனால், அவன் நெஞ்சம் நிமிர்ந்தே இருந்ததாம். அவன் மார்பினில் அணிந்திருக்கிறானே எஃகம் (எஃகினால் செய்யப்பட்ட கவசம்) அதில் அவன் களங்கள் பல கண்டபோது யானைகளால் எறியப்பட்ட ஈட்டிகள் தாக்கி முறிந்ததற்கு அடையாளமாக அங்காங்கே கதுவாய்கள் இருந்தனவாம் (அதாங்க, வடுக்களும் பிளவுகளும்). அது மட்டுமல்ல அவன் முன்னர் வென்ற ஏழு வீராதி வீரர்களின் முடியில் இருந்து எடுக்கப்பட்ட மணிகளைக் கோர்த்து மாலையாக அணிந்திருக்கும் சேரல் ... என்று விரிந்து கொண்டே செல்கிறது இந்தப் பாடல்.
பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களி(று)எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல் ... பதிற்றுப்பத்து பாடல் 45; பரணர் பெருமான் பாடியது; பாடப் பெற்றவர் – கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்.
இந்தப் பாடலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சொல் எதுவென்றால் ‘கது’வென்னும் சொல்! கது என்றால் ஆழமான வடு.
சரி, இப்போ இந்தக் கதையெல்லாம் எதற்கு?
ஆதாங்க, நம்ம பேராசான் எங்கே நம்மைச் சும்மா இருக்கவிடுகிறார்.
இந்த அடக்கமுடைமை அதிகாரத்தின் முடிவுரையாகச் சொல்லும் குறள் இதோ:
“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.” --- குறள் 130; அதிகாரம் – அடக்கமுடைமை
கதம் காத்து = மனத்தினில் , பிறரின் செய்கைகளால் ஏற்படும் வடுக்கள் ஏற்படாமல் காத்து; கற்று அடங்கல் ஆற்றுவான் = அந்தத் திறனைக் கற்று, நிலையின் திரியாது, எந்த நிலையிலும் அடக்கத்தோடு இருப்பவன்; ஆற்றின் நுழைந்து = அவன் நடக்கும் பாதையில் நுழைந்து; செவ்வி அறம் பார்க்கும் = இந்தத் தருணம்தான் அறம் வளரும் காலம் என்று அறங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
செவ்வி = நேரம், காலம், தருணம்.
மனத்தினில், பிறரின் செய்கைகளால் ஏற்படும் வடுக்கள் ஏற்படாமல் காத்து, அந்தத் திறனைக் கற்று, நிலையின் திரியாது, எந்த நிலையிலும் அடக்கத்தோடு இருப்பவன் நடக்கும் பாதையில் நுழைந்து, இந்தத் தருணம்தான் அறம் வளரும் காலம் என்று அறங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
அடக்கமுடையவன் பாதையில் அறம் வளரும் என்றவாறு.
சும்மா அடங்கியிருந்தாலே அறம் வளரும் போல!
அறத்தை வளர்ப்போம் அடக்கத்தினால்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments