09/03/2023 (735)
கொள்வது தீது. கொடுப்பது நன்று. ஈந்தவர் அல்லால் இவ்வுலகில் நிலைத்தவர்கள் யார்? கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்றுதடுப்பவரே பகை... என்றெல்லாம் சொல்லிக் கொன்டே வருகிறார் மாவலி.
ஆச்சாரியாரே, தாங்கள் உள்ளிட்ட ஆன்றோர்கள் ‘கொடுக்காதே’ என்பதை விலக்கத்தானே சொல்லியிருக்கிறீர்கள். பின் இப்போதுமட்டுமென்ன விதி விலக்கு?
உலோபமும், கஞ்சத்தனமும் மனதை அழிக்கும் பகை. மனதை விரிவடையச் செய்யாது. ஆன்றோர்கள் சொல்லிச்சென்ற உரைகளின் சாரத்தைச் சொல்ல வேண்டுமென்றால்:
அறம் செய்ய வேண்டும் என நினத்தால், நம்மிடம் இருக்கும்போதே கொடுத்துவிட வேண்டும். உதவும் வாய்ப்புகள் நம்மிடம் இருக்கும்போதே உதவ வேண்டும். பிறகு பார்ப்போம் என்று இருந்தால் அந்த வாய்ப்பே உங்களுக்கு வாய்க்காமல் போகும். (பார்த்தீங்களா, இதுகூட மடி இன்மைதான்!)
மனதை அழிக்கும் வெம்பகை ஆவது உலோபம். அதனால்தான், அதனை ‘விட்டு விட வேண்டும்’ என்று விலக்கினர் ஆன்றோர்கள்.
“கட்டுரையின் தமகைத்து உள போழ்தே இட்டுஇசை கொண்டு அறன்எய்த முயன்றோர் உள்தெறு வெம்பகை ஆவது உலோபம் விட்டிடல் என்று விலக்கினர் தாமே.” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 21
...படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்! ... புதிய கோணங்கி, மகாகவி பாரதி
தனது ஆச்சாரியாரா அவ்வாறு தடுப்பது என்று மாவலிக்கு மனம் ஆறவில்லை. ஆச்சாரியரின் மேல் கோபம் அதிகரிக்கிறது. மேலும் தொடர்கிறார்.
நேரடிதாக்குதலில் இறங்குகிறார் மாவலி.
எடுத்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை முன்னம் தடுப்பது அழகா? அடிப்படையை மறந்துவிட்டீரா சுக்கிராச்சாரியாரே?
கொடுப்பதை விலக்கும் கொடியவரா நீவீர்? உங்களது சுற்றம் உடுப்பதற்கும் உண்பதற்கும் இல்லாமல் போக வேண்டும் என்பது உங்கள் விருப்பமா?
என்று தாக்குகிறார் மாவலி.
“எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ தகவுஇல் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 22
நம்ம வள்ளுவப் பெருந்தகை சொன்னதையும் பார்ப்போம். காண்க 18/02/2021
“கொடுப்பது அழுக்கறுப்பான்சுற்றம்உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.” --- குறள் 166; அதிகாரம் - அழுக்காறாமை
கொடுப்பது = பிறர்க்கு கொடுப்பது, உதவுவது; அழுக்கறுப்பான் = பொறாமை கொண்டு தடுப்பவன்; சுற்றம் =சுற்றத்தார்; உடுப்பதூஉம் =மானத்தை மறைக்கும் ஆடை இல்லாமலும், உடுத்த துணி இல்லாமலும்;
உண்பதூஉம் = உண்ண உணவு இல்லாமலும்; இன்றிக் கெடும் = இல்லாமல் அழிவான்
மேலும் தொடருவோம். அதுவரை, மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments