24/05/2024 (1175)
அன்பிற்கினியவர்களுக்கு:
சான்றாண்மை, பண்புடைமை உள்ளிட்டவைகளுக்கு ஏதேனும் குறை நிகழுமானால் உயர்ந்தோர் வெட்கப்படுவர், வேதனைப்படுவர். இவ்வாறு இருக்கும் தன்மைக்கு நாணுடைமை என்கிறார். எனவே, அடுத்த அதிகாரமாக நாணுடைமையை வைக்கிறார்.
நாண் என்றால் கட்டுப்படுத்தும் கயிறு (string). வட்டத்தின் பரிதியில் உள்ள இரு புள்ளிகளை ஒரு நேர் கோடு கொண்டு இணைத்தால் அது நாண். வட்டத்தின் மிகப் பெரியநாண் அதன் விட்டம் (diameter) ஆகும்.
வில்லை (bow) வளைத்து நாணால் (string) கட்டியிருப்பார்கள். வில் அப்பொழுதான் பயனுள்ளதாக இருக்கும்.
அம்மா என்றால் மிக அழகானவள்! அம் என்றால் அழகு.
நாண்+அம் = நாணம்; அழகியலோடு அமைந்த கட்டுப்பாடு நாணம்.
கட்டுப்பாடு இருவகைப்படும். அவை யாவன: அகக் கட்டுபாடு, புறக் கட்டுப்பாடு.
நாணம் என்றால் வெட்கப்படுதல் எனலாம்.
வெட்கப்படுதல் இரண்டு வகை. அவை யாவன, 1) நமக்குள்ளேயே வெட்கப்படுதல் (modesty), கூனிக் குறுகிப்போதல்; 2) வெளியே தெரியும்படி வெட்கப்படுதல் (blush).
அவனைப் பார்த்து வெட்கினாள்; இருபாலாரும் கூச்சப்படுவது; அவளைப் பார்த்து வழிந்தான் என்பன இரண்டாம் வகை நாணம் (blush, bashfulness).
முதல் வகை நாணம் (modesty) அகம் சார்ந்தது. இது ஒரு உயர்ந்த குணம். பழிக்கு அஞ்சுவது, தவறாகச் செய்த செயலுக்கு வருந்துவது போன்றன.
நாணத்திற்கு எதிர்ச்சொல் மாணா உவகை. அஃதாவது, கொக்கரிப்பு, ஆர்ப்பாட்டம். ஒரே அலம்பல் பண்றான் என்று சொல்வோமே அதுதான்!
குற்றங்கடிதலில் நம் பேராசான் மூன்றினைப் பட்டியலிட்டார். காண்க 02/04/2021. மீள்பார்வைக்கு:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. - 432; - குற்றங்கடிதல்
ஒருவர்க்குத் தேவைபடும்போது கொடுக்காமல் இருப்பதும், தமக்கு யாரும் ஈடில்லை என்று நினைத்துக் கொண்டு தம்மை நாடி வருவோரைத் தவிர்ப்பதும், தரமற்றக் கொக்கரிப்பும் துன்பத்தைத் தருவன.
குடிமையில் குடியின் இலக்கணத்தை விளக்கும்போது நடுவுநிலைமையும் நாணமும் முக்கியம் என்றார். காண்க 23/07/2022. மீள்பார்வைக்காக:
இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. - 951; - குடிமை
நாணம் என்பது வேறு ஒன்றுமல்ல மனக் கட்டுப்பாடு. மனம் அறுந்து ஓடினால் உடனே பிடித்து ஒரு நிலையில் இருத்தும் ஒரு குணம்.
சரி, இந்த இரு வகை நாணம் உனது கண்டுபிடிப்பா என்றால் இல்லை. இல்லவே இல்லை. நம் பேராசானின் குறளைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள். அந்தப் பாடலைப் பார்ப்போம்.
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. – 1011; - நாணுடைமை
நல்லவர் கருமத்தால் நாணுதல் = நல்லவர்களின் நாணம் என்பது அறமற்ற செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதலே! ஒரு வேளைத் தவறாக தவிர்க்க வேண்டியனவற்றைச் செய்துவிட்டால் அதற்காக வருந்துதலும் அந்த நாணத்துள் அடங்கும்; பிற = மற்றவகை நாணம் என்பது; நாணுத்
திருநுதல் நாணு = அழகிய நெற்றி சுருங்க வெட்கப்படுவதனால் வெளிப்படும் நாணமாம்.
நல்லவர்களின் நாணம் என்பது அறமற்ற செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதலே! ஒரு வேளைத் தவறாக தவிர்க்க வேண்டியனவற்றைச் செய்துவிட்டால் அதற்காக வருந்துதலும் அந்த நாணத்துள் அடங்கும். மற்றவகை நாணம் என்பது அழகிய நெற்றிச் சுருங்க வெட்கப்படுவதனால் வெளிப்படும் நாணமாம்.
அஃதாவது, நாணம் என்றால் கருமத்தால் நாணுவது. இதனை நாம் பழக வேண்டும். இரண்டாம் வகை நாணம் அனிச்சையாக வெளிப்படுவது. வேண்டுமானால் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அது அழகாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே!
நாணுடைமை அதிகாரத்தில் முதல் வகை நாணத்தைச் சொல்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments