06/02/2023 (704)
இரக்கம் இருக்கனும் தம்பி, அதே சமயம் அதிலே நடுவு நிலைமை இருக்கனும் என்றார் செங்கோன்மை அதிகாரத்தில்.
காண்க 27/12/2022 (663)மீள்பார்வைக்காக:
“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை.” --- குறள் 541; அதிகாரம் – செங்கோன்மை
ஓர்ந்து = ஆராய்ந்து, கவனித்து, பார்த்து; அதாவது, தன்னுடன் இருப்பவர்கள் செய்யும் செயல்களை ஆராய்ந்து; யார் மாட்டும் கண்ணோடாது = யாரிடமும் கூட்டியோ குறைத்தோ இரக்கம் காட்டாமல் (அதாவது வேண்டியவனுக்கு அதிக இரக்கம், வேண்டாதவனைக் கண்டுக்காமல் விடுவது போன்றவை);
இறை புரிந்து = அனைவருக்கும் நடு நிலையோடு இருந்து; தேர்ந்து செய்வது அஃதே முறை = சீர் தூக்கிச் செய்வதே ஒரு தலைமைக்கு நன்மை பயக்கும் முறையாகும்.
தம்மோடு பழகினவர்கள், நண்பர்கள், உறவினர்கள் முதலானாவர்கள் மற்றவர்களுக்குத் துன்பம் இழைத்தால் அவர்களுக்கும் தகுந்த தண்டனை தந்து திருத்தவேண்டும் என்பது கடமை. அதை வலியுறுத்துகிறார் மேலே கண்ட குறளில்!
தலைமைக்கு இரக்கம் இருக்கனும்; அதுவும் நடுவு நிலைமையோடு இருக்கனும்; அதே சமயம், ரொம்ப அதிகமாகவும் இருக்கக் கூடாது; அது செய்ய வேண்டிய வேலைக்குத் தடையாக அமைந்து விடக்கூடாது. தலைமைக்கு காரியத்தில் கண் (திண்ணிய எண்ணம்) இருக்கனும், கண்ணோட்டமும் (இரக்கமும்) இருக்கனும்!
குமரகுருபரர் சுவாமிகள் இயற்றிய நீதி நெறி விளக்கத்தில் இருந்து ஒரு பாடலை நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 02/06/2022 (461) மீள்பார்வைக்காக:
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.” பாடல் – 53; நீதிநெறி விளக்கம் – குமரகுருபர சுவாமிகள்
(செவ்வி = காலம், நேரம்)
“கருமே கண்ணாயினார்” இதுதான் அடிநாதம். செய்ய வேண்டிய செயலில் கவனம் இருக்க வேண்டும் என்பதுதான் தலைமைக்கு முக்கியம்.
சரி, இதெல்லாம் எதற்கு? இரக்கம், இரக்கம் என்று தடத்தை மாற்றிவிடக் கூடாது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது “பொருட்பால்”!
அதனால், நம் பேராசான் ஒரு குறளை வரம்புரையாக (Limitation) வைத்துள்ளார்.
“கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.” --- குறள் 578; அதிகாரம் – கண்ணோட்டம்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு = எடுத்துக் கொண்ட செயலின் பயன்கள் சிதையாமல், இரக்கத்தையும் கடைபிடிக்கும் தலைமைக்குத்தான்;
இவ் உலகு உரிமை உடைத்து = இந்த உலகம் உரிமை உடையது.
எடுத்துக் கொண்ட செயலின் பயன்கள் சிதையாமல், இரக்கத்தையும் கடைபிடிக்கும் தலைமைக்குத்தான், இந்த உலகம் உரிமை உடையது.
காரியத்தில் கண் வைக்காமல், இரக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால், நல்லவன் என்று நாலு பேர் சொல்லலாம்! ஆனால், அவனைத் தலைவன் என்று இந்த உலகம் மதிக்காது. அதுதான் உலகத்து இயல்பு. இதை அறிந்துகொண்டால் இந்த உலகத்திற்கு உரிமை கொண்டாடலாம்.
நம்ம பேராசானுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு. அதனால்தான் இந்தக் குறளை வைத்துள்ளார். கண்ணோட்டத்தையும் கடமை தவறாது செய்ய வேண்டும். நாம் காட்டும் இரக்கம் மற்றவர்களுக்குத் துன்பமாக ஆகிவிடக்கூடாது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments