31/05/2024 (1182)
அன்பிற்கினியவர்களுக்கு:
பழிக்கு அஞ்சுபவர்கள், அஃதாவது நாணுடைமை அமைந்தோர், தங்கள் குடியை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்பதனால் நாண் உடைமையைத் தொடர்ந்து குடி செயல்வகை சொல்கிறார்.
தூவு என்றால் தெளி (sprinkle), இறை (scatter), சொரி (shower), மழை (rain) என்றெல்லாம் பொருள் இருப்பது நமக்குத் தெரியும்.
தூவு என்றால் ஒழி என்றும் பொருள் எடுக்கலாமாம். தூவேன் என்றால் ஒழியேன் என்று பொருள். அஃதாவது ஓயமாட்டேன் என்று பொருள்.
கைதூவேன் என்றால் கை ஓய மாட்டேன். அஃதாவது, செய்யாமல் விடமாட்டேன்.
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடைய தில். – 1021; - குடி செயல் வகை
ஒருவன் கருமம் செய கை தூவேன் என்னும் பெருமையின் = ஒருவன் தம் குடியை உயர்த்தாமல் ஓய மாட்டேன் என்று சொல்லிச் செயலில் இறங்குபவனின் பெருமையைவிட; பீடு உடையது இல் = பெரிய பெருமை ஏதும் இல்லை.
ஒருவன் தம் குடியை உயர்த்தாமல் ஓய மாட்டேன் என்று சொல்லிச் செயலில் இறங்குபவனின் பெருமையைவிட பெரிய பெருமை ஏதும் இல்லை.
அந்த ஒருவனுக்குத் தேவையான இரண்டு என்னவென்றால் ஆள்வினையுடைமை, பரந்து விரிந்த அறிவு. இவையிரண்டும் நீண்டு கொண்டே இருந்தால் அவனின் குடியும் வளர்ச்சியைக் கண்டுகொண்டே இருக்கும்.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி. – 1022; - குடி செயல் வகை
ஆள்வினையும் = செயலைச் செய்து முடிக்கக் கூடிய வல்லமையும்; ஆன்ற அறிவும் = அச் செயலுக்குத் தேவையான அகண்ட அறிவும்; என இரண்டின் நீள்வினையால் = என இரண்டினைப் பயன்படுத்திச் செய்யப்படும் குடியை உயர்த்தும் செயல்களால்; நீளும் குடி = அவன் குடி ஓங்கி உயரும்.
செயலைச் செய்து முடிக்கக் கூடிய வல்லமையும், அச் செயலுக்குத் தேவையான அகண்ட அறிவும் என இரண்டினைப் பயன்படுத்திச் செய்யப்படும் குடியை உயர்த்தும் செயல்களால் அவன் குடி ஓங்கி உயரும்.
அவ்வாறு ஒருவன் செய்வான் என்றால் அவனுக்காக, இயற்கை என்னும் இறை தன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவனுக்கு முன்னர் நின்று அச்செயல்களைச் செய்ய கை கொடுக்கும் என்று பார்த்துள்ளோம். காண்க 26/11/2023. மீள்பார்வைக்காக:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். - 1023; - குடி செயல் வகை
குடியை உயர்த்த செயலாற்றுபவர்க்கு அனைத்து உதவிகளும் எளிதாக கிடைக்கும் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments