top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கருவியும் காலமும் ... 631

30/03/2023 (756)

அரசியலைத் தொடர்ந்து, ஒரு தலைமைக்கு அல்லது அரசிற்குத் தேவையான ஏனைய பிற இன்றியமையாதனவற்றைச் சொல்லத் தொடங்குகிறார்.


அந்த இயலுக்கு ‘அங்கவியல்’ என்று பெயர். அதனுள் முப்பத்திரண்டு அதிகாரங்கள் இருக்கின்றன.


அங்கவியலுள் ஆறு அங்கங்களைச் சொல்கிறார். அவையாவன: அமைச்சு, அரண், கூழ், படை, விதி முகத்தால் நட்பு, எதிர்மறை முகத்தால் நட்பு என்பன.


அங்கவியலில் முதல் அதிகாரம் அமைச்சு. அதாவது அமைச்சனது தன்மை. தன்மை என்றால் வேறு ஒன்றுமில்லை, அமைச்சின் குணங்களும், செயல்களும்.


ஒரு செயலைச் செவ்வனே செய்து முடிக்க வைப்பது என்பது அமைச்சனது வேலை.


அதற்கு என்னென்ன வேண்டும்?


நான்கினை பற்றிய அறிவும் திறமும் இருக்க வேண்டுமாம்!


அது என்ன நான்கு?


கருவி, காலம், செய்கை, செய்யும் அருவினை என்ற நான்கு என்கிறார்.


கருவிகள் என்றால் கருவிகள் (RESOURCES)! இதில் பணம் உள்ளிட்ட தேவையானவைகளும் அடங்கும்;

காலம் என்றால் எந்த நேரத்தில் தொடங்கனும், எவ்வளவு நேரம் செலவு செய்யனும் போன்றன;

செய்கை என்றால் செய்யும் வழிமுறைகள்;

செய்யும் அருவினை என்றால் அந்த வழிமுறைகளில் எது சிறந்ததோ அதைக் கொண்டு அச் செயலைச் செய்வது. அதாவது சின்ன கல்லு பெத்த மாங்காய்!


– இந்த நான்கையும் ஆராய்ந்து அறிவுறுத்துபவன்தான் அமைச்சன் என்கிறார்.


கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.” --- குறள் 631; அதிகாரம் - அமைச்சு


கருவி = செயலுக்குத் தேவையான கருவிகள்; காலம் = செயல் செய்ய ஏற்ற காலம்; செய்கை = செய்யும் வழிமுறைகள்; செய்யும் அருவினை = எளிதில் செய்து முடிக்கும் வழி அறிந்து செய்து முடிக்கும் செயல்; மாண்டது அமைச்சு = போன்ற நான்கினையும் திறம்பட நிர்வகிப்பனே அமைச்சன்.


செயலுக்குத் தேவையான கருவிகள், செயல் செய்ய ஏற்ற காலம், செய்யும் வழிமுறைகள், எளிதில் செய்து முடிக்கும் வழி அறிந்து செய்து முடிக்கும் செயல் போன்ற நான்கினையும் திறம்பட நிர்வகிப்பனே அமைச்சன்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)




Comments


Post: Blog2_Post
bottom of page