13/02/2022 (352)
இன்பத்துப் பாலில் குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் இருந்த குறள்களை
குறிப்பறிவித்தல் என்று வேறு ஒரு அதிகாரமும் இருக்கிறது. அதற்கு முன்பு:
அந்தக் காலத்திலே, அதாவது, பண்டைக் காலத்திலே, தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை அகம் என்றும், புறம் என்றும் இரண்டாகப் பகுத்தனர்.
உளம் ஒத்த ஆண் மகனும் பெண் மகளும் தாம் பெற்ற இன்பத்தைப் பிறர்க்கு எடுத்துக் காட்ட முடியாது. அது உள்ளே நிகழ்வது. அதாவது அகத்தில் நிகழ்வது. இந்த காட்ட முடியாத உணர்வுகளை ‘அகம்’ என்றனர்.
அவ் இலக்கியங்களுக்கு ‘அகத்திணை’ என்று பெயர் இட்டனர். ‘திணை’ என்றால் ஒழுக்கம். எல்லாமே, ஒழுக்கம்தான் தமிழ் பழங்குடிகளுக்கு!
‘புறம்’ என்பது புறத்தே அதாவது வெளியே நிகழ்வது. அதாவது, சமுதாயத் தொடர்புசார் நிகழ்வுகள். கொடை, வீரம், கருணை போன்ற நிகழ்வுகள். இது குறித்த இலக்கியங்களை ‘புறத்தினை’ என்றனர்.
என்ன இன்றைக்கு வண்டி எங்கோ போகிறது என்று எண்ணுகிறீர்களா? இதோ முடித்து விடுகிறேன். தனி மனித ஒழுக்கங்களை, அறங்களை வகை வகையாகப் பிரித்து அதனைப் பதிவும் செய்த ஒரே மொழி தமிழ்தான் என்பதில் ஐயம் இல்லை. இது நிற்க.
நேற்று வாட்ஸ்அப் (whatsapp)பில் ஒரு தகவல்:
“We try to hide our feelings but we forgot that our eyes speak”
இதை ஒரு மேற்கோளாக அனுப்பியிருந்தார் ஒரு நண்பர். இதன் பொருள்:
“நாம நம் உணர்வுகளை மறைக்க முயல்கிறோம். ஆனால், நம் கண்கள் காட்டிக் கொடுப்பதை மறந்து விடுகிறோம்.” - என்ன ஒரு உண்மை!
இப்போ ஒரு குறளைப் பார்க்கலாம்:
“கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு.” --- குறள் 1271; அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்
கரப்பினும் = (நீ சொல்லாமல்) ஒளித்து வைத்தாலும்; ஒல்லா(து) = இயலாது; கை இகந்து = உன் கையை மீறி; உண்கண் = உனது மைத்தீட்டிய கண்கள்; உரைக்கல் = சொல்வது; உறுவது ஒன்று உண்டு = தெளிவு படுத்துவது வேறு ஒன்றாய் இருக்கிறது.
“We try to hide our feelings but we forgot that our eyes speak” பாருங்க குறள் அப்படியே ஒத்துப் போகுது இல்லையா?
குறளின் சூழலை நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments