15/02/2022 (354)
“குறிப்பு அறிதல்” என்ற அதிகாரம் இன்பத்துப் பாலில், களவியலில் வைத்து உள்ளார். அதாவது, தற்கால வழக்கில் ‘காதலில்’ ஆட்பட்டவர்களுக்காக.
ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் ‘காதல்’ அதாவது ‘அன்பு’ என்பது இல்லறத்தில் இழையோட வேண்டும் எப்போதும். அப்படித்தான், இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
“குறிப்பு அறிவுறுத்தல்” என்ற அதிகாரம் மணம் முடித்தவர்களுக்காக.
அதனை, இன்பத்துப் பாலில், கற்பியலில் அமைத்துள்ளார்.
நாம் பார்த்த முதல் குறள்:
“கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு.” --- குறள் 1271; அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்
உண்கண் = மைத்தீட்டிய கண். ஒரு கேள்வி வருகிறது இல்லையா?
இருப்பதோ சோகம், அதில் எதற்கு மை தீட்டிய கண்? சும்மா, வெறும் ‘கண்’ என்று சொல்லியிருந்தாலும் பொருள் ஒன்றும் மாறப் போவதில்லை.
தேவையில்லாமல் மையை வேற தீட்டி விட்டிருக்கிறார்?
நம் பேராசான், தேவையில்லாமல் சொற்களைப் போடக் கூடியவர் இல்லையே?
என்ன செய்தி என்றால், இனிய அந்த இல்லாள், தன் கணவன் பிரிந்து சென்றதனால் வருத்தத்தில் தான் உழன்று கொண்டு இருந்தாளாம். இருப்பினும், அவன் வரும்பொழுது, தான் வருந்தியிருந்ததைக் காட்டினால் அவன் மனம் வருந்துமோ என்று எண்ணியும், எங்கே அவளின் கண்கள் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அஞ்சியும் மையிட்டு மறைத்திருக்கிறாளாம். என்ன ஒரு அழகு?
அவன்: உன்னைப் பார்தாலேதான் தெரியுதே. அவசரத்தில் நீ இட்டுக் கொண்ட மை ‘சாரி, கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு’. அதுவே காட்டிக் கொடுக்கிறதே என்று அவன் நினைக்கிறானாம்!
என்னதான் இருந்தாலும் நம்ம ஆள் பெரிய ஆள் தான் என்று அவன் நினைக்கிறானாம். சொல்கிறார் நம் பேராசான். அடுத்தக் குறளில்.
நாளைக்குப் பார்க்கலாம் என்று என் ஆசிரியப் பெருமான் கிளம்பிவிட்டார்.
என்னதான் சொல்லியிருக்கார் நம் பேராசான்??
“கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு …” இப்படி ஏதாவது போட்டிருப்பாரோ?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários