08/02/2022 (348)
மானம் சாரா, இரந்து வாழ்பவர்கள் எப்படி உயிர் வாழ்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார் நம் பேராசான்.
இந்த வையகத்தில், கரப்பிலார் உண்மையாகவே சிலர் இருப்பதால்தானாம்!
அதாவது, ஒளிவு, மறைவு இல்லா கருணை நிறை நெஞ்சங்கள் அருளிக்கொண்டு இருப்பதால்தான் பல உயிர்கள் தன் உயிரைக் காத்துக் கொண்டு இருக்கிறதாம்.
“கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.” --- குறள் 1055; அதிகாரம் – இரவு
கரப்பிலார் வையகத்து உண்மையான் = கரப்பிலா கருணையாளர்கள் சிலர் உண்மையாகவே இருப்பதால்தான்; கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது = (அவர்களின்) முன் நின்று இரத்தலை மேற்கொள்கிறார்கள்.
கர்ணபரம்பரைக் கதைகள் என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். அது என்ன கர்ணனின் பரம்பரையா?
இல்லையாம். கர்ணம் என்றால் காது என்று பொருளாம். கர்ணன் என்றால் ‘காதன்’ என்று பொருளாம். அது என்ன? காதன்? விநோதமாக இருக்கிறதே இப்படியெல்லாம் பெயர் வைப்பார்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
கண்ணன், மூக்கன் என்றெல்லாம், உடல் உருப்புகளைக் கொண்டு பெயர் இருக்கும்போது ‘காதன்’ என்ற பெயர் இருக்கக்கூடாதா என்ன?
மகாபாரதத்தில் பல கர்ணன்கள் இருக்கிறார்கள். துரியோதனின் தம்பிகளில் ஒருவன் பெயரும் கர்ணன்தான். இவன் பீமனால் கொல்லப்படுகிறான். சுகர்ணன், விகர்ணன் என்றெல்லாம் இருந்திருக்கிறார்கள்.
தானவீரன் கர்ணன் முதலில் வாசுசேனா என்றும் ராதேயன் என்று அழைக்கப் பட்டுள்ளார். அதாவது, கடவுளின் குழந்தை அல்லது வளர்ப்புத் தாயான ராதேயின் குழந்தை என்றே அழைக்கப்பட்டுள்ளார். குண்டலங்கள் வெளியே தெரிந்த போது கர்ணனாக அவர் பெயர் மாறியிருக்கலாம்.
சரி, நாம் கர்ணபரம்பரைக்கு வருவோம். கர்ணபரம்பரை என்றால் செவிவழிச் செய்திகளாம். வழி, வழியாக செவிவழிப் பரவும் தகவல்களுக்குத்தான் அந்தப் பெயராம்.
சரி, ஏன் இந்த தகவல்கள் என்கிறீர்களா, ஏதாவது உங்களிடம் சில மணித்துளிகள் உரையாட வேண்டாமா? அதற்காகத்தான்.
உங்கள் கருத்துகளையும் கேட்க ஆவலாக உள்ளேன். பதிவிடுங்கள் ப்ளிஸ்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments