09/10/2021 (228)
குறள்களில் சிரிப்பு பற்றிய குறிப்புகள் பார்த்தபோது தூது அதிகாரத்திலிருந்தும் ஒரு குறளைப் பார்த்தோம்.
தூதுவன்: செய்திகளைத் தொகுத்துச் சொல்பவனாகவும், தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து கேட்பவர் மனம் லேசாகுமாறு நகைச்சுவை உணர்வோடும் கூறுவது மட்டுமல்லாமல் அது அவன் வந்த காரியம் இனிதே முடியும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நம் பேராசான் கூறியிருந்தார்.
“தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.” --- குறள் 685; அதிகாரம் – தூது
நூல் வல்லனாக இருக்க வேண்டும், ஆராய்ந்த கல்வி அறிவு இருக்க வேண்டும், தொகுத்துச் சொல்லும் திறமை இருக்க வேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொன்ன நம் வள்ளுவப் பெருந்தகை
அடுத்து ஒரு முக்கியமான தகுதியைச் சொல்கிறார். கேட்போம் வாங்க.
அதாவது, நாமதான் நிறைய படித்திருக்கோம், எடுத்துச் சொல்வதற்கு தைரியமும் இருக்கு, அவர்களுக்கு எப்படிச் சொன்னால் கேட்பார்கள் என்று ஒருவாறு ஊகித்தும் விட்டோம் என்று நம்ம கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாதாம்!
அப்புறம்?
அது சரிப்பட்டு வரவில்லைன்னு தெரிந்தால் அதை விட்டு விட்டு எது வேலைக்கு ஆகும் என்று கண்டுபிடித்து பயன் படுத்தனுமாம்.
சும்மா அகராதியையே பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாதாம். பார்த்தீங்களா இதான் குறிப்பு (practical tip).
“கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.” --- குறள் 686; அதிகாரம் – தூது
கற்று = பல நீதி நூல்களைக் கற்று; செலச் சொல்லி = செல்லுபடியாகும்படி சொல்லி; கண் அஞ்சான் = அவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தாலும் பயப்படாமல்; காலத்தால் தக்கது அறிவதாம் தூது = அந்த நேரத்துக்கு எது ஏற்றது என்று உடனே அறிந்து பயன் தரும் வகையில் மாற்றிக் கொண்டு செய்து முடிப்பதே தூது.
அதாவது, நூலறிவு பயன் தராது என்றால் வேற எது பயன் தரும் என்றும் அறிந்திருக்கனும். ஒன்றையே பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் மதிவாணன்.
Comentarios