04/11/2021 (254)
கற்று அறிந்தவர்களின் பண்பு உவப்பத்தலைகூடி உள்ளப் பிரிதல் என்று பார்த்தோம். அது தான் மகிழ்ச்சி, சிறப்பு.
இயற்கையாக அமைந்த அழகான குளம், அதிலே அதிசயப் பறவைகள். வேடந்தாங்கல் போலன்னு கற்பனை பண்ணுங்க. குளமும் அழகு, அந்த அன்னங்களும் மிக அழகு. அழகோ அழகு.
ஒரு சண்டியன் இருக்கான். அவனோடு யார் இருப்பாங்க? அவன் அடிபொடிகள், இல்லைன்னா வேற சண்டியர்கள் இருப்பாங்க.
இடுகாடு ஒன்று இருக்கு. அங்கே ஏதாவது கிடைக்காதான்னு காகங்கள் சுற்றிட்டு இருக்கும்.
இதெல்லாம் நம்ம ஔவைபெருந்தகை பார்த்து இருப்பாங்க போல.
‘நம்மாளு’ போல ஒருத்தன் அவங்கிட்ட போய் கற்று அறிந்தவர்களை எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்டிருப்பான். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேட்க கூடாது. சும்மா ஒரு கற்பனைதான்.
அவங்க உடனே ஒரு பாட்டை எடுத்து விட்டாங்க:
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் ,,, ஆரம்பிச்சாங்க
நம்மாளு சும்மா ஊர் சுத்தறது கவனத்துக்கு வந்திருக்கும் போல, கேள்வி மட்டும் கேட்கறான்னு ஒரு குட்டு வைக்கனும்ன்னு அடுத்த வரிகளைப் போட்டாங்க. நம்மாளு அங்கேயிருந்து விட்டான் பாருங்க ஒட்டத்தை!
நம்ம ஔவை பெருமாட்டி இருக்காங்க பாருங்க அவங்க திட்ட ஆரம்பிச்சா நம்ம ஊரு பாட்டிங்க மாதிரிதான். தாக்கு, தாக்குன்னு தாக்குவாங்க. நீங்களே பாருங்க.
“நற்றாமரைக் கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.” --- மூதுரை – ஔவையார்
கயம் = குளம்; முகப்பர் = விரும்புவர்; முதுகாடு = சுடுகாடு; உகக்கும் = விரும்பும்
குறள் சிந்தனையை நாளை தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments